சென்னை: ஹெச்எம்பிவி தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சையோ, மருந்தோ இல்லை. 3 முதல் 6 நாட்களில் தானாகவே சரியாகிவிடும் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று ஹெச்எம்பி வைரஸ் தொற்று குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசியதாவது: ஹெச்எம்பி வைரஸ் தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. 2001-ம் ஆண்டிலும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. குளிர்காலம், இளவேனில் காலங்களில் இந்த வைரஸ் பரவக்கூடும். இந்த நோய்க்கான அறிகுறிகள் சளி, காய்ச்சல், இருமல், சுவாச பாதிப்புகள். இந்த வைரஸ் பாதிப்பு குணமாக 3 முதல் 6 நாட்கள் வரை ஆகும்.