ஹூப்பள்ளி கலவரம் தொடர்பாக பதிவான 56 வழக்குகளில் 43 வாபஸ்: உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தகவல்

3 months ago 15

பெங்களூரு: ஹூப்பள்ளி கலவரம் தொடர்பாக பதிவான 56 வழக்குகளில் 43 வழக்குகள் திரும்பபெறப்பட்டுள்ளன. வழக்கு வாபஸ் பெறுவதற்கான வழி முறைகள் தனியாக இருக்கின்றன, மாநில அரசு அதன்படி நடந்து கொள்கிறது என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம் அளித்தார். ஹூப்பள்ளி கலவர வழக்கை வாபஸ் பெறுவது என மாநில அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்ட நிலையில் பாஜவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூரு சதாசிவாநகரிலுள்ள அவரின் வீட்டில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அமைப்பினர், மக்கள் கோரிக்கையின் பேரில் அதை பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கை எடுப்பது வழக்கமாகும். அதன்படி தான் ஹூப்பள்ளி சம்பவத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஹூப்பள்ளி கலவரத்தின் போது எதற்காக இவ்வளவு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. அமைச்சரவை துணை கமிட்டி அளித்த சிபாரிசின் பேரில் வழக்கை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது போல் கேஜி ஹள்ளி மற்றும் டிஜே ஹள்ளி சம்பவங்களும் பரிசீலனை செய்யப்படும். அதே நேரம் பாஜவினர் அரசின் செயல்பாடுகளில் அதிகம் மூக்கை நுழைக்கின்றனர். அமைச்சரவையின் முடிவு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அரசின் முடிவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் வழக்கு வாபஸ் பெறப்படும். ஹூப்பள்ளி கலவரம் தொடர்பாக மொத்தம் 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் 43 வழக்குகள் மட்டுமே வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பொய் புகார் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை வாபஸ் பெறுவதற்கான அதிகாரம் அரசிடம் உள்ளது.

ஹூப்பள்ளி கலவரத்தில் முஸ்லீம் சமுதாயத்தினர் மீது மட்டும் இன்றி மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அதை பரிசீலனை செய்த பிறகே 43 வழக்குகள் வாபஸ் பெறலாம் என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது.
சித்தார்த் விகார் அறக்கட்டளை, சி.ஏ. நிலம் தேவையில்லை என 5 ஏக்கரை திருப்பி அளித்துள்ளது. விதிகளின்படி நிலம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் தேவையற்ற விவாதம் எழுந்துள்ளதால் அது வாபஸ் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. அதே நேரம், பாஜவினருக்கு காமாலை நோய் வந்துவிட்டது. எனவே, அனைத்தும் தவறாகவே தெரியும். இதற்கு எதுவும் செய்யமுடியாது’. இவ்வாறு அவர் கூறினார்.

* பாஜ அரசு வாபஸ் பெறவில்லையா?
செய்தியாளர்களின் கேள்வி பதிலளித்து அமைச்சர் பரமேஸ்வர் பேசும்போது, ‘உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை அவரே வாபஸ் பெற்றுள்ளார். பாஜ ஆட்சியில் இதற்கு முன்பு பல வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஹூப்பள்ளி கலவர வழக்கை வாபஸ் பெறவேண்டும் என 60 விண்ணப்பம் வந்த நிலையில் சட்ட விதிகளின்படி அரசு முடிவு எடுத்துள்ளது’ என்றார்.

* காங்கிரசின் வாக்கு வங்கி அரசியல்
பெங்களூரு சுதந்திர பூங்காவில் காங்கிரஸ் அரசின் முடிவை கண்டித்து பாஜ சார்பில் போராட்டம் நடந்தது. பாஜ தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், துணை தலைவர் அரவிந்த் பெல்லத், எம்பி பி.சி.மோகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அப்போது விஜயேந்திரா பேசுகையில், ‘காங்கிரஸ் அரசு சமாதான அரசியல் கொள்கையை கடைபிடிக்கிறது.

கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை விடுதலை செய்யும் முடிவு மிகவும் தவறானதாகும். காங்கிரஸ் அரசின் இந்த தவறான நடவடிக்கையின் காரணமாக சமூக விரோதிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரம் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவிட்டது. காங்கிரசின் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது’ என குற்றம் சுமத்தினார்.

The post ஹூப்பள்ளி கலவரம் தொடர்பாக பதிவான 56 வழக்குகளில் 43 வாபஸ்: உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article