
சென்னை,
ஆந்திராவில் போலீஸ் சூப்பிரண்டான இருக்கும் நானி ஒரு கொடூர கொலையை செய்கிறார். பின்னர் ஒன்றுமே தெரியாதது போல அந்த கொலை வழக்கை விசாரிக்கிறார். மீண்டும் ஒரு கொலையை அவர் செய்யும்போது, மற்றொரு பெண் போலீஸ் அதிகாரி கோமளி பிரசாத் அதை பார்த்துவிட பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
இதையடுத்து இந்த 2 கொலைகளை ஏன் செய்தேன்? என்பது குறித்து நானி விளக்கம் கொடுக்கிறார். அப்போது ஒரு அதிர்ச்சி பின்னணி இருப்பது தெரியவருகிறது. போலீஸ் அதிகாரியாக இருக்கும் நானி கொடூரமாக கொலைகளை செய்வது ஏன்? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? முடிவில் என்ன ஆனது? என்பதே பரபரப்பான மீதி கதை.
ஒட்டுமொத்த படத்தையும் தோளில் தாங்கியுள்ளார், நானி. படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் சீரியசாகவே இருக்கிறார். சண்டை காட்சிகளில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். அழகாலும், நடிப்பாலும் ஸ்ரீநிதி கவர்கிறார். சிறிது நேரமே வந்தாலும் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி விடுகிறார்.
பெண் போலீஸ் அதிகாரியாக வரும் கோமளி பிரசாத் கவனிக்க வைக்கிறார். நானி தான் கொலையாளி என்று கண்டுபிடிக்கும் காட்சிகள் பரபரப்பு. வில்லனாக வரும் பிரதீக் பாபர் பயமுறுத்தி இருக்கிறார். சமுத்திரக்கனி, சூர்யா சீனிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், அமித் சர்மா, அதிவி சேஷ் உள்ளிட்டோரும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கார்த்தியின் 'திடீர்' வருகை எதிர்பாராதது.
கேமராவை பல்வேறு கோணங்களில் சுழற்றி ஒளிப்பதிவில் வித்தை காட்டியுள்ளார், சனு ஜான் வர்கீஸ். கதையுடன் ஒன்ற செய்யும் இசையால் கவனிக்க வைக்கிறார், மிக்கி ஜே.மேயர். நானியின் நடிப்பும், பரபரப்பான திரைக்கதையும் பலம். ரத்தம் தெறிக்கும் அதீத வன்முறை காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
தொடர் கொலைகளுக்கு பின்னணியில் உள்ள மிகப்பெரிய 'சஸ்பென்ஸ்', படம் முழுக்க நீடிக்க செய்து, பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த திரைக்கதையில் படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், சைலேஷ் கோலனு. கிளைமேக்ஸ் காட்சி திருப்பம்.
