ஹவாலா பண பரிவர்த்தனை என ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை மிரட்டி பல கோடி பறிப்பு; வெளிநாட்டு மோசடி கும்பலுக்கு உடந்தை சென்னை ஏஜென்ட்கள் 13 பேர் கைது: ரூ.53 லட்சம், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்

1 month ago 6

சென்னை: சென்னையில் ஓய்வு பெற்ற அரசு பொறியாளரை தொடர்பு கொண்டு ஹவாலா பணபரிவார்த்தனை நடந்ததாக மிரட்டி ரூ.4.67 கோடி பறித்த வெளிநாட்டு மோசடி கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்ட 13 ஏஜென்டுகள் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.53 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் ஒருவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது செல்போனுக்கு பதிவு செய்யப்பட்ட குரலில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், உங்கள் செல்போன் இணைப்பு 2 மணி நேரத்தில் துண்டிக்கப்படும். மேலும் தகவலுக்கு எண் 9ஐ அழுத்தவும், என்று தெரிவிக்கப்பட்டது. அதை உண்மை என நம்பி, எண்ணை அழுத்தினேன்.

உடனே அழைப்பில் பேசிய நபர், உங்கள் செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை பயன்படுத்தி பல வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, ஹவாலா பண பரிவர்த்தனை நடந்துள்ளது என்றும், இதனால் எனது மீது மும்பை மற்றும் டெல்லி சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறினர். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், அதுபோன்று எந்த பண பரிவர்த்தனையும் நான் செய்யவில்லை, என்றேன். அதற்கு, எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் உங்களை வழக்கில் இருந்து விடுவித்து விடுகிறோம், என்று கூறி வீடியோ கால் மூலம் வங்கி கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டனர்.

அதன்படி, நானும் வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்தேன். சிறிது நேரத்தில் எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.4.67 கோடி பணத்தை மோசடியாக எடுத்து கொண்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகாரில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, மோசடி நபர்கள் சென்னை வில்லிவாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் அலுவலகம் அமைத்து, வயதான அரசு அதிகாரிகளின் செல்போன் எண்களை பெற்று அவர்களிடம், ஹவாலா மூலம் வெளிநாட்டிற்கு பணத்தை அனுப்புவதாக மிரட்டி பல கோடி ரூபாய் பறித்து வந்தது தெரியவந்தது.

அப்படி மோசடி செய்யும் பணத்தை வெளிநாட்டில் உள்ள மோசடி கும்பலுக்கு அனுப்பி அந்த பணத்தை அமெரிக்கா டாலர் மற்றும் கிரிப்டோ மற்றும் பினான்ஸ் கரன்சிகளாக பெற்று வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளிநாட்டு மோசடி நபர்களுக்கு உடைந்தையாக சென்னையில் இருந்து ஏஜென்டுகளாக செயல்பட்டு வந்த 13 பேர் கொண்ட கும்பலை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.53 லட்சம் ரொக்கம், மோசடிக்கு பயன்படுத்திய செல்போன்கள், செக்புக், ஏடிஎம் கார்டுகள், பாஸ்புக் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 13 பேரும் சர்வதேச மோசடி கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதால் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவிக்கவில்லை. மேலும், கைது செய்யப்பட்ட 13 பேரின் உதவியுடன் வெளிநாடுகளில் உள்ள மோசடி கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஹவாலா பண பரிவர்த்தனை என ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை மிரட்டி பல கோடி பறிப்பு; வெளிநாட்டு மோசடி கும்பலுக்கு உடந்தை சென்னை ஏஜென்ட்கள் 13 பேர் கைது: ரூ.53 லட்சம், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article