ஒட்டவா,
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு கொல்லப்பட்டார். கனடா குடியுரிமை பெற்றுள்ள அவரது கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரடியாக குற்றஞ்சாட்டினார். இதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, கனடா- இந்தியா இடையேயான இரு தரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதனிடையே, கனடாவை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது..
இந்த நிலையில், கனடா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக கனடா பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நதாலி ஜி ட்ரூயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: -
கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி, கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகள் மீது கனடா காவல்துறையினர் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், பிரதமர் மோடி, அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை இந்த குற்றச் செயல்களுடன் தொடர்பு படுத்தி கனடா அரசு எதுவும் கூறவில்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை.இதற்கு எதிர்மாறாக வெளியாகும் அனைத்து செய்திகளும் தவறானவை" என்று கூறப்பட்டுள்ளது.