ஹர்திக் பண்டியா அணியில் உள்ள நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி.20 தொடரில் துணை கேப்டனாக அக்சர் நியமனம் ஏன்?

3 weeks ago 6

மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி.20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் டி.20 போட்டி 22ம் தேதி கொல்கத்தா நடக்கிறது. 2வது போட்டி 25ம் தேதி சென்னை, 3வது போட்டி 28ம் தேதி ராஜ்கோட், 4வது போட்டி 31ம் தேதி புனே, கடைசி போட்டி பிப்.2ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்கிறார். ரிஷப் பன்ட், கில், ஜெய்ஸ்வால், சிராஜ், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 14 மாதங்களுக்கு பின் அணிக்கு திரும்பி உள்ளார். அவர் கடைசியாக 2023ம் ஆண்டு நவ. 19ம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை பைனலில் ஆடினார். தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி தங்கள் இடத்தை தக்க வைத்துள்ளனர். ஷிவம் துபே, ரியான் பராக்கிற்கு இடம் கிடைக்கவில்லை. நிதிஷ்குமார் முதன்முறையாக இடம்பிடித்துள்ளார். துணை கேப்டனாக 30 வயதான ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா அணியில் உள்ள நிலையில் அவருக்கு பதிலாக அக்சர் நியமிக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஐபிஎல்லில் கேப்டனாக சாம்சன், ஹர்திக் உள்ள நிலையில் அவர்களை விடுத்து முதன்முறையாக துணை கேப்டன் பொறுப்பை அக்சரிடம் வழங்கப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்தியா 16 டி.20 போட்டிகளில் ஆடி 10ல் வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் அவர் அடிக்கடி காயத்தில் சிக்குவதால் இந்த தொடருக்கு தற்காலிக துணை கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் காலத்தில் கில், பும்ரா அணிக்கு திரும்பும் பட்சத்தில் அவர்களில் ஒருவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் சாம்பியன் டிராபி தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்திய அணி விபரம்:- சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (வி.கீ.), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (து.கே.), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (வி.கீ).

சாம்பியன் டிராபி லீக் பும்ரா ஆடுவாரா?
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட் வீழ்த்தி தொடர் நாயகன் விருது பெற்றார். இந்நிலையில் சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட்டில் முதுகில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். இந்நிலையில், உடற்தகுதி பரிசோதனைக்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார். அங்கு பரிசோதனையில் அவருக்கு எலும்பு முறிவு இல்லை. ஆனால் முதுகில் வீக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் குணமடைவதை தேசிய கிரிக்கெட் அகாடமி கண்காணிக்கும் மற்றும் அவர் 3 வாரங்கள் அங்கு இருப்பார். அதற்கு பிறகு, அவர் ஓரிரு போட்டிகளில் விளையாடி உடற்தகுதியை நிரூபிக்கவேண்டும். இதனால் அவர் சாம்பியன் டிராபி தொடரில் லீக் சுற்று போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிகிறது. அரையிறுதிக்குஇந்தியா நுழைந்தால் அதில் ஆடுவார்.

The post ஹர்திக் பண்டியா அணியில் உள்ள நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி.20 தொடரில் துணை கேப்டனாக அக்சர் நியமனம் ஏன்? appeared first on Dinakaran.

Read Entire Article