ஸ்வச் பாரத் 2.0 திட்டத்தின் கீழ் கடற்கரை சாலையில் ₹66 லட்சத்தில் நவீன சுகாதார வளாகம்

1 month ago 7

*புதுச்சேரி நகராட்சி நடவடிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியின் மிக முக்கியமான சுற்றுலாத்தளங்களில் புதுச்சேரி கடற்கரை சாலை முதன்மை இடத்தை பிடித்துள்ளது. சுற்றுலாப்பயணிகளால் ‘ராக் பீச்’ என அழைக்கப்படும், கடற்கரையில் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் குவிவது வழக்கம். இதுபோன்ற சூழலில் கடற்கரை சாலையின் இருமுனைகளிலும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கழிவறைகள் சுற்றுலாப்பயணிகளுக்கு போதுமானதாக இல்லை. மேலும் ஓய்வறைகள், குளியலறைகள் உள்ளிட்ட வசதிகளை கொண்ட நவீன சுகாதார வளாகம் இல்லாதது பெரும் குறையாக இருந்து வந்தது. இதற்கிடையே ஸ்வச் பாரத் மிஷன்(2.0) திட்டத்தின் கீழ் டூப்ளெக்ஸ் சிலைக்கு அருகே உள்ள கழிவறைகளை மறுவடிமைக்க புதுச்சேரி நகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்காரணமாக விரைவில் உயர்தர நவீன சுகாதார வளாகத்தினை பொதுமக்கள் விரைவில் அணுகலாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள நவீன சுகாதார வளாகத்தில் டச்லெஸ் ப்ளஷிங், சானிட்டரி நாப்கின் எரியூட்டிகள், காற்று சுத்திகரிப்பு இயந்திரம், குழந்தை டயபர் மாற்றும் அறை, ஓய்வறைகள், தானியங்கி வாஷ் பேஷன் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருப்பதோடு, பகுதியாக குளிரூட்டப்பட்ட வசதியையும் இது கொண்டிருக்கும். இதுகுறித்து நகாராட்சி ஆணையர் கந்தசாமியிடம் கேட்டபோது, இத்திட்டத்தின் முன்மொழிவுக்கு பொருத்தமான டெவலப்பரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி மேற்கொண்டு வருகிறது.

சுமார் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், வருவாய் பகிர்வு(தனியார்) மாதிரியின் கீழ் மேற்கொள்ளப்படும். முழு குளிரூட்டப்பட்ட பிரீமியம் வகுப்பு கழிப்பறையை பயன்படுத்த பயனாளர்கள் ரூ.100 மற்றும் குளிரூட்டப்படாத கழிப்பறைகளுக்கு ரூ.20 செலுத்த வேண்டியிருக்கும். டாய்லெட் பிளாக்கின் மேல் தளத்தில் கடலுக்கு அருகில் ஏசி சிற்றுண்டிச்சாலை அமைக்கும் திட்டமும் உள்ளது.

கடலுக்கு அருகில் நிரந்தர கட்டுமானங்கள் அனுமதிக்கப்படாததால், அகற்றக்கூடிய கூடாரங்களைப் பயன்படுத்தி சிற்றுண்டிச்சாலை நிர்மாணிக்கப்படும். சுகாதாரத்தை பராமரிப்பதில் முக்கியத்துவம் கொடுத்து பராமரிப்பு மற்றும் செயல்படுத்தும் பணிகள் அவுட்சோர்ஸ் செய்யப்படும். அதேபோல் பழைய சாராய ஆலைக்கு அருகிலுள்ள மற்றொரு கழிப்பறை தொகுதியும் புதுப்பிக்கப்படும். கடற்கரைப் பகுதிக்கு அருகில் முறையான கழிப்பறை வசதி ஏற்படுத்திக்கொடுப்பது, சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் நிம்மதியை தரும், என்றார்.

சுற்றுலா ஏஜென்சி நிறுவன ஆப்ரேட்டர் கூறுகையில், சுற்றுலாப்பயணிகளின் முக்கிய புகார்களில், முதன்மையானது சுத்தமான கழிப்பறைகள் இல்லாததுதான். நகராட்சி இத்திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக இளைஞர்கள் அதிகாலையில் நகரத்துக்கு வருவதால், புத்துணர்ச்சியடைவது கடினமாக இருக்கிறது. அவர்களுக்கு உயர் வசதி கழிவறையைக் கொண்டிருப்பது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.

கழிவறைக்குச் செல்லும் பெண்களுக்கு தூய்மையுடன் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் நகராட்சி உரிய கவனம் செலுத்த வேண்டும். கழிவறை பராமரிப்பு பணிகளை அவுட்சோர்ஸ் செய்யப்பட்டாலும்கூட, அதன் செயல்பாட்டை மேற்பார்வை செய்வதற்கான முறையான அமைப்பை நகராட்சி உருவாக்க வேண்டும், என்றனர்.

The post ஸ்வச் பாரத் 2.0 திட்டத்தின் கீழ் கடற்கரை சாலையில் ₹66 லட்சத்தில் நவீன சுகாதார வளாகம் appeared first on Dinakaran.

Read Entire Article