
சென்னை,
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது தனது 171-வது படமான 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இதில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய உள்ளது. அதனை தொடர்ந்து படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் ரஜினிகாந்தின் நடிப்பு திறமையை விமர்சித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா என்று கேட்டால் தனக்கு தெரியவில்லை. ஆனல் அவரால் ஸ்லோமோஷன் காட்சிகள் இல்லாமல் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியுமா என தெரியவில்லை என்றும் கூறினார்.
எதுவுமே செய்யாமல் பாதி படம் வரை ரஜினிகாந்த் ஸ்லோ மோஷனில் காட்சிகளில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஒரு நடிகருக்கும், ஸ்டாருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. அவரால் ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் இந்த கருத்து இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.