ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் சென்ற 6 பேருந்துகளுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்: கலெக்டர் அதிரடி நடவடிக்கை

19 hours ago 1


செய்துங்கநல்லூர்: ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் சென்ற 6 பேருந்துகளுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் அதிரடி நடவடிக்ைக மேற்கொண்டார். நெல்லையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம், ஏரல், முக்காணி, ஆத்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், மறுமார்க்கத்தில் இதே வழியும் வரும் பேருந்துகள், ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் புதுக்குடி மெயின் ரோட்டிலேயே நின்று செல்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்திய நிலையில், அனைத்து பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்ல வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்தே சென்று திரும்புகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத்திடம், பஸ்கள் ஊருக்கு வராமல் செல்வது குறித்து ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் முறையிட்டனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.  அப்போது ஒரு தனியார் பஸ் மற்றும் 5 அரசு பஸ்கள், ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் சென்றது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எல்லையான செய்துங்கநல்லூர் சோதனை சாவடியில் கலெக்டர் இளம்பகவத் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் சென்ற பஸ்களை நிறுத்தி விசாரித்தார். டிரைவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வழிகளில் மட்டுமே செல்வதாகவும், ஸ்ரீவைகுண்டம் பஸ் நிறுத்தம் கிடையாது என்றும் கூறினர். இதற்கு பதிலளித்த கலெக்டர், வழித்தட அனுமதி கொடுப்பதே நாங்கள்தான். எந்த பேருந்தையும் ஸ்ரீவைகுண்டத்திற்குள் செல்ல வேண்டாமென கூறவில்லையே என்று குறிப்பிட்டார். அதற்கு டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எங்கள் நிர்வாகம் கூறிய வழிமுறைகளை தான் பின்பற்றுகிறோம் என்று முறையிட்டனர்.

பின்னர் தலா ரூ.10 ஆயிரம் வீதம் 6 பேருந்துகளுக்கும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார். தொடர்ந்து ஊருக்குள் செல்லாமல் சென்றால் மீண்டும் அபராதம் விதிக்க வேண்டுமென வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கலெக்டரின் இந்நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆய்வின் போது ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னா சங்கர், வட்டார போக்குவரத்து அலுவலர், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர், பழனிசாமி மற்றும் போலீசார், பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பைபாசே இல்லை…பைபாஸ் ரைடரா…
பொதுமக்களுக்காக தானே பேருந்துகள் ஓடுகிறது. அரசு போக்குவரத்து கழகமும் அதற்குத்தானே இயங்குகிறது. ஆனால் நீங்கள் பொதுமக்களை ஊருக்குள் சென்று ஏற்றாமல் இடையில் இறக்கி விட்டால் என்ன அர்த்தம் என்று அபராதம் விதிக்கப்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்களிடம் கலெக்டர் இளம்பகவத் கேள்வி எழுப்பினார். சில டிரைவர்களிடம் மக்களுக்காக பஸ் ஓட்டவில்லை. ரேசுக்காக பஸ் ஓட்டுகிறீர்கள் என கடிந்து கொண்டார். மேலும் நெல்லை – திருச்செந்தூர் இடையே பைபாஸ் சாலையே இல்லை. பின்னர் எப்படி பைபாஸ் ரைடர் என பெயரிடப்பட்டு உள்ளது என்றும் வினவினார். தொடர்ந்து இதுபோன்று நடந்து கொண்டால் பர்மிட்டை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

வழி – ஸ்ரீவைகுண்டம் என்று எழுத வேண்டும்
ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சிவராமலிங்கம், ராமகிருஷ்ணன் கூறுகையில், கலெக்டரின் நடவடிக்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு பேருந்துகள் ஊருக்குள் வராததை கண்டித்து 1996ம் ஆண்டிலேயே பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக தான் ஸ்ரீவைகுண்டத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது. ஆனாலும் எங்கள் ஊரை புறக்கணிப்பது தொடர்கிறது. நாங்களும் போராடித்தான் வருகிறோம். கடந்த காலங்களில் தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் சமாதான கூட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்படுவதும், அதன் பிறகு ஓரிருநாள் ஊருக்குள் வருவதும் ெதாடரும். அதே நிலை தற்போது ஏற்பட்டு விடக்கூடாது. எனவே அனைத்து பேருந்துகளிலும் வழி -ஸ்ரீவைகுண்டம் என எழுதிட வேண்டும் என்றனர்.

நள்ளிரவில் ஊருக்குள் வந்தது பேருந்துகள்
கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் நேற்றிரவு 11.45 மணிக்கு நெல்லைக்கு சென்ற அரசு பஸ், ஸ்ரீவைகுண்டத்திற்குள் வந்து சென்றது. கலெக்டரின் உத்தரவை போக்குவரத்து கழகத்தினர் தீவிரமாக அமல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் சென்றது ஏன்? என்று பஸ் நிலைய போக்குவரத்து கழக நேர காப்பாளர் முத்துராமலிங்கம் நேற்று கேள்வி எழுப்பியபோது கண்டக்டர் வாக்குவாதத்திற்கு செல்வதுபோல் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

செய்துங்கநல்லூர் பஜார் பகுதியில் பொது கழிவறை
செய்துங்கநல்லூர் சோதனை சாவடியில் பேருந்துகளை கண்காணிக்க முகாமிட்டிருந்த மாவட்ட கலெக்டரிடம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, செய்துங்கநல்லூர் பஜாரில் இருந்து தினமும் பேருந்துகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர். ஆனால் பஜாரில் பொதுமக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இதுகுறித்து தினகரனிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். உடனடியாக அருகில் இருந்த கருங்குளம் ஆணையாளரிடம் பொது கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

The post ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் சென்ற 6 பேருந்துகளுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்: கலெக்டர் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article