ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயிகள் வித்தியாச ஐடியா : விளைநிலங்களை தேடி வரும் யானைகளை மிரட்ட ‘புலி உறுமல்’

1 day ago 1

Tiger Roar, Srivilliputhurஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுவதை தடுக்க ஸ்பீக்கர் மூலம் ‘புலி உறுமல்’ சத்தங்களை ஒலி பரப்பி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் செண்பக தோப்பு வனப்பகுதி உள்ளது. இதையொட்டி, பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

கடந்த 4-5 மாதங்களாக ஒற்றை யானை மற்றும் யானைகள் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதை தடுக்க மலை அடிவாரப்பகுதியில் அகழிகள் அமைக்கும் பணிகளில் வில்லிபுத்தூர் சரக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜீப்களில் இரவு நேரங்களில் ரோந்து சென்று யானைகளை விரட்டும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சில விவசாயிகள் வித்தியாசமாக யோசித்து தங்கள் நிலங்களில் ஸ்பீக்கர்களை அமைத்து ‘புலிகளின் உறுமல்’ சத்தங்களை இரவு முழுவதும் ஒலிபரப்பி வருகின்றனர். இந்த யோசனைக்கு நல்ல பலன் கிடைத்தது. புலிகளின் உறுமல் சத்தம் வந்த நிலங்களுக்கு யானைகளின் வருகை இல்லாமல் போனது. இதனால் அந்த விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து ஏராளமான விவசாயிகள் இதே முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி கருப்பையா கூறுகையில், “யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில் நாங்களும் வித்தியாசமாக முயற்சித்து கடைகளில் விற்கப்படும் புலிகளின் உறுமல் பதிவுகளை வாங்கி, இரவு நேரத்தில் தொடர்ந்து ஒலிக்கும்படி செய்கிறோம். அதிகாலை 6 மணி அளவில் தானாக ஒலிபரப்பு நின்றுவிடும். காடு முழுவதும் பல்வேறு தோட்டம், விவசாய நிலங்களில் இருந்து புலிகளின் உறுமல்கள் கேட்பதால், புலிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக நினைத்து யானைகள் தோட்டத்திற்கு வருவதை தவிர்த்து விடுகின்றன. இதனால் விவசாய நிலங்கள் சேதம் அடைவதும் தவிர்க்கப்படுகிறது’’ என்றார்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயிகள் வித்தியாச ஐடியா : விளைநிலங்களை தேடி வரும் யானைகளை மிரட்ட ‘புலி உறுமல்’ appeared first on Dinakaran.

Read Entire Article