ஸ்ரீரங்கம்,
பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் பண்டிகை நாட்களில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிறப்பு வைபவங்களும், புறப்பாடுகளும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார்.
மாட்டுப்பொங்கலையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 7 மணிக்கு கனுமண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு பாரிவேட்டை நடத்தியபடி தெற்குவாசல் கடைவீதிகளில் உலா வந்தார்.
பின்னர் காலை 10.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்பெருமாள் பாரிவேட்டை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.
இதைபோல ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ராப்பத்து உற்சவத்தின் 6-ம் நாளான நேற்று உற்சவர் நம்பெருமாள் நாவல்பழ நிற வஸ்திரம், முத்து கிரீடம், வைர அபய ஹஸ்தம், ஸ்ரீரங்க விமான பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 6 வட முத்துச்சரம், புஜகீர்த்தி, பங்குனி உத்திர பதக்கம், தாயத்து சரங்கள், திருவடியில் தங்க தண்டைகள் அணிந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.