ஸ்ரீமுஷ்ணம் அருகே பரிதாபம் வெள்ளாற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

4 weeks ago 4

 

ஸ்ரீமுஷ்ணம், டிச. 16: ஸ்ரீமுஷ்ணம் அருகே கள்ளிப்பாடி கிராமத்தில் வெள்ளாறு அமைந்துள்ளது. இந்த வெள்ளாற்றில் தொடர் மழையால் தண்ணீர் திறந்து விடப்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி-விஜயலட்சுமி ஆகியோர் மகன் சக்தி (13) என்கிற சிறுவன் காலை 11 மணியளவில் வெள்ளாற்றுக்கு சில நண்பர்களுடன் சென்று குளித்துள்ளான். அப்போது ஆற்றின் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளான்.

இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் வாசிகள் ஆற்று பகுதிக்கு சென்று நீண்ட நேரம் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதையடுத்து ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தீவிரமாக தேடினர். பின்னர் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின் ஆற்றில் இருந்த கருவேலமரத்தில் சடலமாக சிக்கியிருந்த சக்தியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனை பார்த்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

சக்தி ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வந்தான். இறந்த சக்திக்கு உடன் பிறந்த 2 சகோதரிகள் உள்ளனர். சக்தியின் தந்தை சபரிமலைக்கு சென்றிருந்தார். இதுகுறித்து தகவலறிந்தவுடன் அவர் அதிர்ச்சியடைந்து திரும்பி வந்துள்ளார்.  இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் சக்தியின் தாயார் விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சேதுபதி ஸ்ரீமுஷ்ணம் காவல் உதவி ஆய்வாளர் அண்ணாமலை மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ஸ்ரீமுஷ்ணம் அருகே பரிதாபம் வெள்ளாற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article