ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் வெட்டுக்காயங்களுடன் இளம்பெண் மர்ம மரணம்: கொலையா? என போலீஸ் விசாரணை

21 hours ago 2

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் நெடுஞ்சாலையை ஒட்டி இன்று அதிகாலை தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒரு இளம்பெண் மர்மமான நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூர், ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் நெடுஞ்சாலையை ஒட்டி, இன்று அதிகாலை தலை மற்றும் முகத்தில் வெட்டுக் காயங்களுடன் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் இருப்பதாக பெரும்புதூர் காவல் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அங்கு அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இப்பெண் கொளத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரி (27) எனத் தெரியவந்தது. இவர், வெங்காடு பகுதியில் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்துள்ளார். மேலும் இப்பெண் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு தனது தாய் புஷ்பாவிடம் சண்டை போட்டுவிட்டு, தனது உடைகளுடன் விக்னேஷ்வரி வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு, இன்று காலை தலை மற்றும் முகத்தில் வெட்டுக் காயங்களுடன் விக்னேஷ்வரி இறந்து கிடந்துள்ளார் என தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டைவிட்டு வெளியேறிய இளம்பெண் காதலனால் வெட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது அவரை வேறு யாரேனும் கடத்தி சென்று தாக்கினார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து மேற்குறிப்பிட்ட மர்ம நபர்களின் கைரேகைகளையும் தடயங்களையும் சேகரிக்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இளம்பெண்ணின் மர்ம மரணம் குறித்து உறவினர்கள் மற்றும் சக தொழிலாளர்கள் உள்பட பலரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் வெட்டுக்காயங்களுடன் இளம்பெண் மர்ம மரணம்: கொலையா? என போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article