
சென்னை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னையில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரஜத் படிதார் 51 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை களமிறங்கி உள்ளது.
இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து நடப்பு தொடரில் இதுவரை 7 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நூர் அகமது, அதிக விக்கெட் வீழ்த்திய பவுலருக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார்.
அந்த தொப்பி வழங்கும் நிகழ்வில் பேசிய நூர் அகமது, "ஊதா நிற தொப்பிக்கு உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தொடரின் இறுதி வரை அதை வைத்திருப்பேன் என்று நம்புகிறேன். பிட்ச் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. சுழல் அதிக அளவில் இல்லை. அதனால் லென்த் பந்துகளை வீச விரும்பினேன். ஸ்டம்புகளுக்குப் பின்னால் தோனி இருப்பது எனக்கு அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்" என கூறினார்.