ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமா இந்தியா..? இன்டர்போல் உதவியை நாடும் வங்காளதேச அரசு

6 months ago 18

டாக்கா:

வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தீவிர போராட்டம் நடைபெற்றது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராடினர். போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை மற்றும் மோதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

நாட்டில் நிலைமை கைமீறி சென்ற நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் ஆகஸ்ட் 5-ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவரை நாடு கடத்தி, வங்காளதேசத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையை முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மேற்கொண்டு வருகிறது.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பாக ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹசீனா உள்ளிட்டவர்களை கைது செய்ய நீதிமன்றம் வாரண்டு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் ஷேக் ஹசீனா மற்றும் தப்பியோடிய பிற நபர்களை நாட்டிற்கு கொண்டு வர இன்டர்போலின் உதவியை நாடப்போவதாக வங்காளதேச இடைக்கால அரசாங்கம் இன்று தெரிவித்தது.

இன்டர்போல் மூலம் விரைவில் ரெட் நோட்டீஸ் வெளியிடப்படும் என்றும், தப்பியோடியவர்கள் உலகில் எங்கு மறைந்திருந்தாலும், அவர்கள் மீண்டும் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சட்ட அமலாக்கத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்தார்.  

Read Entire Article