வைத்திலிங்கம், எடப்பாடி நண்பர், பிஎஸ்கே நிறுவனத்தை தொடர்ந்து சசிகலா ஆதரவாளர் வீடு, நிறுவனங்களில் ஐடி ரெய்டு: ஒரே நேரத்தில் 6 இடங்களில் நடந்தது

3 weeks ago 4

சாத்தூர்: வைத்திலிங்கம் வீடு, எடப்பாடி நண்பர், பிஎஸ்கே நிறுவனத்தை தொடர்ந்து சசிகலா ஆதரவாளருக்கு சொந்தமான வீடு, மில், மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள சிதம்பரா நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவருக்கு சொந்தமாக சாத்தூர் அப்பையநாயக்கன்பட்டி அருகே கோவில்பட்டி நான்குவழிச்சாலையில் பெரிய ஓடைப்பட்டியில் பேப்பர் மில் உள்ளது.

இதேபோல், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையிலும் பேப்பர் மில் உள்ளது. அதேபோல், கிருஷ்ணா கேர்ஸ் என்னும் பெயரில் தமிழ்நாட்டில் பல இடங்களில் மருத்துவமனைகள் உள்ளன. இவர் சசிகலாவின் தீவிர ஆதரவாளர். அவரது பினாமி என்றும் கூறப்படுகிறது. இவர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார். வெங்கட்ராமன் இறந்த பிறகு, அவரது தொழில்களை மகன் வினோத் கவனித்து வருகிறார். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகார் எழுந்து வந்தது.

மேலும் சீனாவில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் பாலித்தீன், கெமிக்கல் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், சாத்தூரில் வெங்கட்ராமன் மற்றும் வினோத்திற்கு சொந்தமான வீடு, மருத்துவமனை, மில் உள்ளிட்ட 6 இடங்களில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் வருமானவரித் துறையினர் தீவிர சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை வரை சோதனை நடந்தது. மற்ற இடங்களில் சோதனை முடிந்த நிலையில், அப்பையநாயக்கன்பட்டியில் உள்ள மில்லில் நேற்று பிற்பகல் வரை தொடர்ந்து சோதனை நடந்தது.

வீடு, மில், மருத்துவமனை உள்ளிட்ட 6 இடங்களில் ஒரே நேரத்தில் நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சில ஆவணங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனையும், எடப்பாடியின் நெருங்கிய நண்பர் சேலம் இளங்கோவன் பள்ளி, கல்லூரிகள், பேப்பர் மில் உள்ளிட்ட நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனையும் நடந்தது.

இங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அதிமுக ஆதரவாளரும், அரசு ஒப்பந்தாரருமான பிஎஸ்கே குழும பெரியசாமிக்கு சொந்தமான சென்னை அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஐடி ரெய்டு நடந்தது. இந்நிலையில், சசிகலா ஆதரவாளரான வெங்கட்ராமன் தரப்பில் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது.

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து அதிமுக தொடர்புடையவர்கள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை பாஜ தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், இந்த சோதனைகளை மேற்கொண்டுள்ளது என்றும், இனிவரும் காலங்களில் அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் மாஜி அமைச்சர்கள் மீது இதுபோன்ற சோதனைகள் நடக்கலாம் என்றும் தெரிகிறது.

* இளங்கோவனின் கல்வி நிறுவனங்களில் 4வது நாளாக தொடர்ந்து சோதனை
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பருமான இளங்கோவனுக்கு சொந்தமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கடந்த 22ம் தேதி முதல் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் நேற்று 4வது நாளாக கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர்.

இதேபோல், கோவையில் உள்ள இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட், அருண் அஸ்வின் பேப்பர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், புளூ மவுண்ட் பேப்பர் பிரைவேட் லிமிடேட், ஆகியவற்றின் அலுவலகங்களிலும் 4வது நாளாக சோதனை நடந்தது. இதுதவிர, கோவையில் உள்ள 8 தொழில் நிறுவனங்களிலும் ரெய்டு நடந்தது.

The post வைத்திலிங்கம், எடப்பாடி நண்பர், பிஎஸ்கே நிறுவனத்தை தொடர்ந்து சசிகலா ஆதரவாளர் வீடு, நிறுவனங்களில் ஐடி ரெய்டு: ஒரே நேரத்தில் 6 இடங்களில் நடந்தது appeared first on Dinakaran.

Read Entire Article