சென்னை,
கேரள மாநிலம் வைக்கம் நகரில் மகாதேவர் கோவில் உள்ளது. அந்த கோவில் இருக்கும் தெருவில் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்த ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் முதலான சமுதாயத்தினர் நடந்து சென்றால் அது தீட்டு என்றும், எனவே அவர்கள் அங்கு செல்லவே கூடாது என்றும் தடை இருந்தது.
அந்த தடையை உடைப்பதற்காக 1924-ம் ஆண்டில் நடைபெற்ற போராட்டம்தான் வைக்கம் போராட்டம். பெரியார் அங்கு சென்று நடத்திய கோவில் நுழைவுப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியை நினைவுகூறும் வகையில் பெரியாருக்கு வைக்கத்தில் நினைவகம் அமைக்கப்பட்டது. கேரள அரசு வழங்கிய நிலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அந்த நினைவகம் கட்டப்பட்டு 1994-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
அந்த நினைவகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அதனை புனரமைக்க முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இதற்காக ரூ.8 கோடியே 14 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. அதன்படி, புனரமைப்பு பணிகளும், நூலகத்தை விரிவுபடுத்தும் பணிகளும் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டன.
அதில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான அரிய புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா ஆகியவை சிறப்பான முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது. மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலையும் இருக்கிறது.
இதையடுத்து பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று காலை கேரள மாநிலம் கொச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். கொச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, கேரள மாநிலம் கோட்டயத்தில் ரூ.8 கோடியில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் சேர்ந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்த நிகழ்வின்போது, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக தந்தை பெரியார் நினைவகத்தில் உள்ள பெரியாரின் திருவுருச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து தி.க. தலைவர் கி.வீரமணி, திருமாவளவன், தமிழக அமைச்சர்கள், கேரள மந்திரிகள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.