
சென்னை,
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்கிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களை தி.மு.க. அறிவித்துள்ளது. அதன்படி, அக்கட்சி சார்பில் தற்போது எம்.பி., ஆக உள்ள வில்சனிற்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் அண்மையில் கவர்னருக்கு எதிரான வழக்கில் தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் வாதாடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், தொ.மு.ச. பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக புதியதாக எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோரை வேட்பாளர்களாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
இந்த சூழலில் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக, நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது செய்த உடன்பாடு அடிப்படையில் ம.நீ.ம.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
இந்நிலையில் வைகோவுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படாத நிலையில், இதுகுறித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவைத் தொகுதி எம்.பி-யுமான துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வோம். நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல.. எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார்" என்று துரை வைகோ தெரிவித்தார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது, கட்சி தொண்டர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட தி.மு.க. வாய்ப்பளிக்கும் என்று கூறப்படுகிறது.