சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னையில் உள்ள வைணவ திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 60வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. இந்நிலையில், மகத்துவம் வாய்ந்த மார்கழியில் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏதாதசியையொட்டி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளித்தார்.
இதன் பின்னர் வைணவ திருமந்திரங்கள் ஓத ஆரத்தி எடுக்கப்பட்டது. பெருமாளை கண்டு பக்தர்கள் ஆராவாரத்துடன் விண்ணதிர கோவிந்தா… கோவிந்தா.. என பக்தி முழக்கமிட்டனர். சொர்க்கவாசல் திறப்பையொட்டி நேற்று முந்தினம் இரவு முதலே பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணமாக இருந்தனர். காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் நடந்தது. குறிப்பாக, 1,500 கட்டண சீட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டன. அதேபோல், முதலில் வரும் 500 பேருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், சொர்க்கவாசல் தரிசனம் செய்ய கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும் கோயிலின் பின்கோபுர வாசல் வழியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதை முன்பே கணித்து கோயிலின் சுற்றுப்புறங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 32 கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட உள்ளன. இதுதவிர, கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் வசதி போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.
கூட்ட நெரிசலை தவிர்க்க ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதேபோல், தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் ‘சொர்க்கவாசல் திறப்பு’ நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். காலை 5 மணி முதல் சிறப்பு தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர, மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில், சீனிவாசன் பெருமாள் கோயில், கேசவ பெருமாள் கோயில், அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயில், கோயம்பேட்டில் உள்ள வைகுண்ட வாச பெருமாள் கோயில், சைதாப்பேட்டையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து வைணவ திருத்தலங்களிலும் பரமபத வாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு: விண்ணை அதிர வைத்த கோவிந்தா… கோவிந்தா… முழக்கம்; பார்த்தசாரதி, பெருமாள் கோயில்களில் அலைமோதிய மக்கள் appeared first on Dinakaran.