பெங்களூரு: பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள வைணவ திருத்தலங்களில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படும். அந்நாளில் வைணவ திருத்தலங்களில் சொர்க்க வாசல் திறப்பார்கள். அதில் நுழைந்து சாமி தரிசனம் செய்தால், பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அதன்படி இவ்வாண்டு வைகுண்ட ஏகாதசி நேற்று கொண்டாடப்பட்டது. பெங்களூரு பாஷியம் சர்க்கிளில் உள்ள வைகுண்ட கைலாச மகா நுழை வாயிலில், ராஜாஜிநகரில் உள்ள புகழ் பெற்ற இஸ்கான் கோயில், ராம்மந்தீர் கோயில், மலேஸ்வரம் வயாலிகாவலில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம், கோட்டை வெங்கடரமணசாமி கோயில், தொம்மலூரில் உள்ள பெருமாள் கோயில், கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள வெங்கடரமணசுவாமி கோயில், மாலூர் தாலுகாவில் உள்ள சிக்க திருப்பதி, முல்பாகல் தாலுகாவில் உள்ள குட்டஹள்ளி வெங்கடரமணசுவாமி கோயில்.
பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் பின்புறம் மகாத்மாகாந்தி ரயில்வே காலனியில் உள்ள விநாயக ஸ்ரீ வெங்கடரமணசுவாமி கோயில், மகாலட்சுமி லே அவுட்டில் உள்ள வெங்கடேஸ்வரசுவாமி, சாம்ராஜ்பேட்டையில் உள்ள வெங்கடரமணசுவாமி கோயில், முத்தய்யனபாளையத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி மகாஷேத்ரா, மைசூரு வங்கி சர்க்கிளில் உள்ள வெங்கடரமணசுவாமி கோயில், காமாட்சிபாளையம் விருஷபாவதி நகரில் உள்ள ஸ்ரீலட்சுமி வெங்கடேஷ்வரசுவாமி கோயில்.
தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள ஸ்ரீலட்சுமி வெங்கடரமணசுவாமி கோயில், பாலகாட் சர்க்கிளில் உள்ள ஸ்ரீநம்மாழ்வார் சன்னதி, கண்ணபிரான் சன்னதி, ஆண்டர்சன்பேட்டையில் உள்ள நம்பெருமாள் சன்னதி, மாரிகுப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீஆண்டாள் சன்னதி உள்பட மாநிலத்தில் உள்ள நூற்றுகணக்கான வைணவ திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் நேற்று அதிகாலை 3.33 மணி முதல் சொர்க வாசல் வழியாக சாமிதரினம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று நள்ளிரவில் கடும் பனிபொழிவும் கடும் குளிரும் வாட்டியது. அதை கண்டு கொள்ளாமல், சொர்க வாசல் வழியாக பெருமாளை தரிசனம் செய்வதில் ஆர்வம் காட்டினர். ஒவ்வொரு கோயிலிலும் பெருமாள் பல்வேறு வடிவங்களில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சொர்க்க வாசல் வழியாக சென்ற பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என்று முழக்கம் எழுப்பியப்படி சென்றனர்.
பக்தர்களின் முழக்கம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது. பெங்களூரு பாஷியம் சர்க்கில் உள்ள ஸ்ரீவைகுந்த கைலாச நுழைவாயில், இஸ்கான் கோயில், ராம்மந்திரில் உள்ள ராமர்கோயிலில் அதிகாலை 2 மணி முதல் மாலை வரை ஆயிரகணக்கான பக்தர்ள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பல கோயில்களில் அன்னதானம், நீர் மோர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. பெரும்பான்மையான கோயில்களில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோல் சாம்ராஜ்நகர் குளத்து தெருவில் உள்ள ஸ்ரீதேவி சமேத காடு நாராயணசாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழு வாசல்கள் அமைக்கப்பட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் நாராயணின் தரிசனத்தை பெற்று சென்றனர். அதிகாலை 2.30 மணிமுதல் நடந்த சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. அதேபோல், எலந்தூர் தாலுகாவில் உள்ள பிலிகிரி ரங்கநாதர் கோயில், குண்டல்பேட்டை தாலுகாவில் உள்ள ஹிமவத் கோபாலசாமி கோயிலிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
The post வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு: கோவிந்தா… கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் பரவசம் appeared first on Dinakaran.