வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.65,000 கோடி ஒதுக்கலாம்: பா.ம.க.வின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி!!

3 hours ago 2

சென்னை: 2025 – 2026ம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 18-வது, வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை – தி.நகர் ஜி.ஆர்.டி கிராண்ட் ஹோட்டலில் இன்று வெளியிட்டார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

1. 2025 – 26ம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினெட்டாம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.85,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.65,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும்.

2.வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.

3.வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.22,500 கோடி செலவிடப்படும்.

4.பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.

5.தமிழ்நாட்டின் மொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25 சதவீதம் வேளாண்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது பாமகவின் நிலைப்பாடு. அதன்படி, பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் கோடி என்றால், அதில் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6.வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்திற்காக ரூ.85,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில் வேளாண்மை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

7.பயிர்க் கடன்சுமை, கொள்முதல் விலை உள்ளிட்ட உழவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை களைவதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும்.

8.தமிழ்நாட்டில் 2025 – 26ம் ஆண்டு உழவர்களின் இலாபத்தையும் வாழ்வாதாரத்தையும் பெருக்குவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.

9.அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வேளாண் விளைபொருட்கள் (கொள்முதல் விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல்) சட்டம் 2025 நிறைவேற்றப்படும்.

10.அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக, வேளாண் வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும். இவ்வாறாக வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 82 தலைப்புகளில் 240 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை பா.ம.க.வின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி இவற்றில் அரசுக்கு சாத்தியமானவற்றை மார்ச் 15ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக அரசின் ஐந்தாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்த்து, அதனை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

The post வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.65,000 கோடி ஒதுக்கலாம்: பா.ம.க.வின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி!! appeared first on Dinakaran.

Read Entire Article