சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: எஸ்.எஸ்.எல்.சி தோல்வி, எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி, எச்.எஸ்.சி, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை-32, கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம்.
விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதிவுடையவர் ஆவர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை-32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் சென்னை-32. கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.