
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு பொம்மனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஹரீஷ். இவரது மனைவி பத்மஜா (வயது 29). இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. தம்பதியின் சொந்த ஊர் கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் ஆகும். அவர்கள் காதலித்து திருமணம் செய்திருந்தனர். 2 பேரும் என்ஜினீயரிங் படித்துள்ளனர். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹரீஷ், பத்மஜா ஆகியோர் வேலை செய்து வந்தனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக ஹரீஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று பத்மஜா வணிகவளாகத்திற்கு சென்று பொருட்களை வாங்கி வந்துள்ளார். அதிக செலவு செய்து பொருட்களை வாங்கி வந்திருப்பதாக கூறி பத்மஜாவிடம் ஹரீஷ் கேள்வி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக தம்பதி இடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது ஆத்திரமடைந்த ஹரீஷ், பத்மஜாவை தாக்கியதுடன் கழுத்தை நெரித்ததாக தெரிகிறது. இதனால் அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் பத்மஜாவின் கழுத்தில் காலால் மிதித்து ஹரீஷ் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பொம்மனஹள்ளி போலீசார் விரைந்து சென்று பத்மஜாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது தனது மனைவி கீழே தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறி போலீசாரிடம் ஹரீஷ் நாடகமாடியுள்ளார். ஆனால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், பத்மஜாவை, ஹரீசே கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, ஹரீசை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மனைவியை கொலை செய்ததை ஹரீஷ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, ஹரீஷ் கைது செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வேலையை விட்டு விட்டதால், ஹரீஷ் விரக்தியில் இருந்து வந்துள்ளார். மனைவியின் சம்பளத்தை வைத்தே குடும்பம் நடத்தியுள்ளனர். அவரும் பணத்தை தேவையில்லாமல் பொருட்களை வாங்கி செலவு செய்ததாலும், வேலையில்லாத விரக்தியிலும் பத்மாஜாவை கொலை செய்திருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து பொம்மனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரீசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.