வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கு எதிரான மேல்முறையீட்டு மனு: தீர்ப்பு தள்ளிவைப்பு

2 hours ago 2

சென்னை,

கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை வேலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த ஞானசேகரன். வருமானத்திற்கு அதிகமாக ரூ.3 கோடியே 15 லட்சம் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி வேல்முருகன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமான வரி கணக்கில் சொத்துக்களை குறிப்பிட்டுள்ளதால் அவை சட்டபூர்வமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களாக கருத முடியாது என்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவிக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரம் ஏதும் இல்லை என்றும் வாதிட்டார்.

மேலும் இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமானவரித்துறை கணக்கின் அடிப்படையில் மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை பதிவு செய்துள்ளது என்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதாக கூறப்படக்கூடிய காலகட்டத்திற்கு முன்பே இருவருக்கும் ஏராளமான சொத்துக்கள் இருந்ததாகவும் வாதிட்டார்.

குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியே என்றும் அதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Read Entire Article