வேலூர், மே 8: வேலூர் மாவட்டத்தில் காலையில் 100.6 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில், இரவில் ஜில்லென்று பெய்த மழையால், 2வதுநாளாக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமுள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளடங்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. இரண்டு நாட்கள் முன்பு வேலூரில் 104 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகள் மக்கள், வாகன நடமாட்டம் குறைந்து வெறிச்சோடின.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் மாவட்டத்தில் பரவலாக காற்றுடன் கூடிய மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. அதேநேரத்தில் 2வது நாளாக நேற்று காலை 100.6 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில், இரவில் மாவட்டத்தில் வேலூர், சத்துவாச்சாரி, காட்பாடி, திருவலம், பொன்னை, குடியாத்தம், அணைக்கட்டு, ஊசூர், கணியம்பாடி, ஒடுகத்தூர் என பரவலாக ஜில்லென்று பெய்த மழையால், வெப்பம் தணிந்து விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
குடியாத்தம்: குடியாத்தம் நகரம் மற்றும் கொண்டசமுதிரம், கூடநகரம், பெரும்பாடி, அம்மன்குப்பம், மேல்பட்டி, நெல்லூர்பேட்டை, சீவூர் உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது கனமழையால் குடியாத்தம் நடுப்பேட்டை அம்மனாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேல்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி சங்கர் என்பவரின் ஓட்டு வீட்டின் மீது தென்னை மரம் விழுந்து வீட்டிற்கு உள்பகுதி முழுவதும் சேதம் அடைந்தது.
மழை நேரத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. மேலும் பெரும்பாடி சாலையில் மின் கம்பம் கீழே விழுந்து சேதம் ஏற்பட்டது. சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரம் விழுந்ததை நெடுஞ்சாலைத் துறையினர் சீர் செய்தனர். குடியாத்தத்தில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை டவுன் போலீசார் சீர் செய்தனர்.
The post வேலூர் மாவட்டத்தில் காலையில் 100.6 டிகிரி வெயில், இரவில் ஜில்லென்று மழை: 2வது நாளாக மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.