வேலூரில் மலைபுற்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் 1,330 திருக்குறள் எழுதி அசத்திய ஓவியர்: தமிழக அரசு பாதுகாக்க கோரிக்கை

4 weeks ago 7

வேலூர்: வேலூரில் மலைபுற்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் 1,330 திருக்குறள் எழுதி ஓவியர் அசத்தி உள்ளார். அதை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். திருக்குறளை 133 அதிகாரகளுடன் 1330 குறள்களை திருவள்ளூவர் எழுதினார். இந்த நூல் உலக பொதுமறையான நூலாக திகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்நிலையில் வேலூர் கஸ்பா பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல்(50). இவர் பிஏ தமிழ் படித்துவிட்டு பல ஆண்டுகளாக ஓவியராக பணியாற்றி வந்தார்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஓவிய தொழில் மிகவும் நலிவடைந்துவிட்டது. இதனால் அவர் வேறு தொழிலாளி நோக்கி சென்றார். அதாவது துணிக்கடையில் ஒன்றில் தற்போது பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் திருக்குறள் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக நேரம் கிடைக்கும்போது எல்லாம் மலைபுற்கள் கொண்டு வெல்வேட் பேப்பரில் ஒவ்வொரு அதிகாரமாக மொத்தம் 133 அதிகாரத்தில் உள்ள 1,330 திருக்குறள் தமிழ் மொழியில் எழுதி அசத்தி உள்ளார். பின்னர் தொடர்ந்து ஆங்கிலம், இந்தி மொழியில் தனித்தனியாக திருக்குறள் எழுதி அசத்தி உள்ளார்.

இதுகுறித்து ஓவியர் வெற்றிவேல் கூறுகையில், நான் ஓவியர் தொழில் செய்து வந்தேன். தொடர்ந்து தனியார் பிரின்டிங் பிரஸ் கடையில் வேலை செய்து வந்தேன். அதன்பிறகு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்தும் டிஜிட்டல் பேனர்களாக மாறிவிட்டது. இதனால் எனக்கு வேலை இல்லைாமல் அவதிக்கு ஆளாகி வந்தேன். தொடர்ந்து தனியார் துணிக்கடையில் வேலை செய்து வருகிறேன். ஓவியத்தின் மீது இருந்த ஈர்ப்பு காரணமாகவும், திருக்குறள் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் திருக்குறள் முக்கிய மொழிகளில் எழுதி வெளியிட வேண்டும் என்று எண்ணம் வந்தது.

அதன்படியே திருக்குறளை வித்தியசமான முறையில் எழுதி வெளியிட வேண்டும் என்று எனது மனதில் தோன்றியது. மலைகளில் கிடக்கும் புற்களை கொண்டு 1330 திருக்குறள்களை கருப்பு வெல்வேட் பே்பபரில் வைத்து எழுதினேன். இது எழுத எனக்கு 200 நாட்கள் தேவைப்பட்டது. அடுத்தாக மற்ற மொழி மக்களுக்கு திருக்குறள் குறித்து புரிய வைக்க வேண்டும் என்றால் அதற்கு தனியாக எழுத வேண்டும். ஆனால் எனக்கு ஆங்கிலம் தெரியும். இந்தி தெரியாது. இதனால் தனியாக இந்தி வகுப்புக்கு சென்று முதலில் இந்தியை கற்றுக்கொண்டேன். அதன்பிறகு ஆங்கிலம், இந்தி இரு மொழிகளில் தமிழ்போலவே மலைபுற்களை கொண்டு திருக்குறள் எழுதி உள்ளேன்.

அடுத்தக்கட்டமாக தெலுங்கில் எழுத உள்ளேன். அதற்காக தெலுங்கு மொழியை கற்று வருகிறேன். தற்போது எழுதி வைத்துள்ள இந்த திருக்குறள் ஏதாவது அரசு அருங்காட்சியகம் மற்றும் நினைவு அரங்குளில் வைத்து அரசு பாதுக்காக வேண்டும். இதை வைத்து கொண்டு நான் பாதுகாப்பதற்கு பெரும் சிரமமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அல்லது தமிழக அரசு என்னிடம் இருக்கும் இந்த புற்களால் எழுதி உள்ள திருக்குறள்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

The post வேலூரில் மலைபுற்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் 1,330 திருக்குறள் எழுதி அசத்திய ஓவியர்: தமிழக அரசு பாதுகாக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article