வேலூர்: வேலூரில் கடந்த 2022ம் ஆண்டு நள்ளிரவு பெண் டாக்டரை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி இரவு ஆண் நண்பருடன் வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டரில் இரவுக்காட்சி பார்த்து விட்டு நள்ளிரவு 1 மணியளவில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு ஒரு ஆட்டோவில் சென்றுள்ளனர். அந்த ஆட்டோ மருத்துவமனை வழியில் செல்லாமல் திசைமாறி சென்றது.
ஆட்டோ டிரைவரிடம் பெண் டாக்டரும், ஆண் நண்பரும் கேட்டுள்ளனர். அதற்கு வழியில் பேரிகார்டு வைத்து அடைத்துள்ளனர். அதனால் சத்துவாச்சாரி ஆற்காடு சாலை வழியாக செல்லலாம் என்று கூறியுள்ளனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை வழியாக பெண் டாக்டரையும், ஆண் நண்பரையும் கடத்திக்கொண்டு, கலெக்டர் அலுவலகம் முன்பாக பாலாற்றங்கரை சென்றுள்ளனர். அங்கு ஆண் நண்பரை அடித்து சாலையில் தள்ளிவிட்டு, 100 மீட்டர் தூரத்தில் அவர் கண்ணெதிரே பெண் டாக்டரை ஆட்டோவில் வந்த 5 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து செல்போன்கள், ரூ.40 ஆயிரம் பணம் மற்றும் 2 சவரன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி பறித்தனர். சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து சத்துவாச்சாரியில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு பணம், நகை பங்கு பிரிப்பதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ரோந்து சென்ற சத்துவாச்சாரி போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், சிஎம்சி மருத்துவமனை பெண் டாக்டரை கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் பெண் டாக்டரிடம் புகாரை பெற்று 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகரை சேர்ந்த பார்த்திபன் (22), பரத் என்கின்ற பாரா(20), சந்தோஷ்குமார்(24), சத்துவாச்சாரி நேரு நகரை சேர்ந்த மணிகண்டன் என்கின்ற மணி(23) மற்றும் 17 வயது சிறுவன் என 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் பார்த்திபன், பரத் ஆகியோர் சகோதரர்கள் ஆவர்.
இது தொடர்பான வழக்கு வேலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட பார்த்திபன், பரத், சந்தோஷ்குமார், மணிகண்டன் ஆகிய 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி மகேஷ்வரி பானு ரோகா, குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் 16 மாத சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞர் சந்தியா மற்றும் அரசு வழக்கறிஞர் விக்னேஷ்வரி ஆகியோர் ஆஜரானது குறிப்பிடத்தக்கது. வழக்கின்போது கைதான 17வயது சிறுவன், சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு தனியாக போக்சோ நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. விரைவில் அதற்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்றுபோலீசார் தெரிவித்தனர்.
* நிருபர்களை தாக்க முயற்சி
வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டுக்கு நேற்று பிற்பகல் 3 மணியளவில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அழைத்து வரப்பட்டனர். அப்போது பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள் போட்டோ, வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். திடீரென குற்றவாளி ஒருவர் தனியார் டிவி கேமராமேனை வேகமாக கையை ஓங்கி அடிக்க முயற்சித்தார். உடனே போலீசார் அவரை தடுத்து அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
The post வேலூரில் கடந்த 2022ம் ஆண்டு நள்ளிரவு பெண் டாக்டரை கடத்தி கூட்டு பலாத்காரம் 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை: மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.