*40 கிலோ ராட்சத கிழங்கை கண்டு மக்கள் வியப்பு
வேலூர் : தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி வளாகத்தில் பாரம்பரிய காய்கறி மற்றும் கிழங்கு வகைகளின் கண்காட்சி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடந்தது. இதில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் விவசாயிகளும், பொதுமக்களும் திரண்டு வந்தனர்.
இங்கு 800க்கும் மேற்பட்ட மரபுக்காய்கறி மற்றும் 50க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகள் திறந்தவெளி அரங்கில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர்.
இந்த கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட தக்காளி வகைகள், கத்தரி, மிளகாய், கிழங்கு வகைகள், பூசணிக்காய் வகைகள், சுரைக்காய் வகைகள், வெண்டை வகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான ரகங்கள் பொதுமக்கள் இதுவரை பார்த்திராத மற்றும் பயன்பாட்டில் இல்லாத ரகங்களாகும்.
இதை ஒவ்வொருவரும் வியப்புடன் பார்த்தனர்.மேலும் பாரம்பரிய அரிசி வகைகள், மூலிகைச் செடிகள், கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் போன்றவை காட்சிபடுத்தப்பட்டிருந்தது. காலை முதலே ஏராளமான இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். பல்வேறு பொருட்களையும் அவர்கள் வாங்கிச் சென்றனர்.
மேலும் அறிக்கை சார்ந்த விவசாயத்தை வலியுறுத்தும் வகையில் கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் இயற்கை விவசாயிகள், வல்லுனர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் இக்கண்காட்சியில் வகை வகையான பாரம்பரிய காய்கறிகள், விதைகள், அவற்றுக்கான செடி, கொடிகள், கிழங்குகள், கீரை வகைகள், நாம் உண்ணத்தகுந்த களைகளாக பாவித்து வீசியெறியும் கீரைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இதனை ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்த்து வாங்கி சென்றனர். மேலும் 40 கிலோ எடை கொண்ட வெற்றிலை வள்ளிக்கிழங்கை மக்கள் வியந்து பார்த்தனர். காய்கறிகளுடன், விதைகளையும் அதிகளவில் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அதோடு இயற்கை வேளாண் ஆர்வலர்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள் பேச்சுக்களை ஆர்வமுடன் கவனித்து பார்வையாளர்கள் குறிப்பு எடுத்துக்கொண்டனர்.
The post வேலூரில் ஆர்வமுடன் பார்வையாளர்கள் திரண்டனர் பாரம்பரிய காய்கறி, கிழங்குகள் கண்காட்சி appeared first on Dinakaran.