வேலூரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

2 months ago 8

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த மதுபோதையில் இருந்த 3 மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

இது குறித்து அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை அளிக்க புகாரை வாங்க மறுத்த காவலர்கள், இன்னொரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். அங்கும் புகார் பெற்றுக் கொள்ளப்படாத நிலையில், சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதற்கு பிறகு தான் முதல் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இவை அனைத்தையும் கடந்து 13 வயது சிறுமிக்கு அவர் வாழும் வீட்டுக்கு அருகிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டில் எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெறுகிறது?. அதை விடக் கொடுமை என்னவென்றால், இத்தகைய குற்றச்சம்பங்கள் நடக்காமல் தடுத்திருக்க வேண்டிய காவல்துறை, சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்த புகாரைக் கூட வாங்காமல் அவரது குடும்பத்தினரை அலைக்கழித்திருக்கிறது.

அனைத்துக் குற்றங்களுக்கும் மூல காரணம் மது மற்றும் போதைப்பழக்கங்கள்தான். 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதுடன், மதுக்கடைகளை உடனடியாக மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறுமியை பாதுகாப்பதற்குக் கூட திறனற்ற அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை.

தமிழக அரசுக்கு எதிராக மக்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றனர். வெகு விரைவிலேயே அவர்கள் கொதித்தெழுவார்கள். அரியலூர் ரெயில் விபத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்றைய ரெயில்வேத்துறை அமைச்சர் அழகேசனுக்கு எதிராக திமுகவினர் முழக்கிய வாசகங்களை இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் முழங்குவார்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article