வேதாரண்யம், பிப்.11: வேதாரண்யம் அருகே பட்டதாரி பெண் 1,520 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்துள்ளார் .இவரது வயலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் நேரில் பார்வையிட்டு சாகுபடி செய்யும் முறை குறித்து கள பயிற்சி எடுத்து வருகின்றனர். தமிழர்களின் முக்கிய உணவு அரிசியாகும். இதனால் தமிழகத்தில் அதிளவில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிணற்றுப்பாசனம், ஆற்றுப்பாசனம் முறைகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. ஆரம்ப கால கட்டங்களில் அதிக மழை பெய்ததால் முப்போக சாகுபடி நடைபெற்று வந்தது. பின்னர் இருபோகம், ஒரு போகம் என்று மாறி விட்டது. நெல் சாகுபடிக்கு வயல்களில் இயற்கை உரங்களையே பயன்படுத்தி வந்தனர்.
அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு வகையான சத்துக்கும் ஒவ்வொரு உரங்களை பயன்படுத்த தொடங்கினர். இதனால் செயற்கை உரங்களால் இயற்கை சத்துக்கள் இல்லாமல் போனது. அதேபோல் வேளாண் பல்கலைக்கழகம் கண்டுபிடித்து வெளியிடும் பல்வேறு ரக விதைகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் உணவுபொருட்கள் நஞ்சாக மாறத்துவங்கி விட்டது. இந்நிலையில் பாரம்பரிய நெல் ரகங்களை தேடி கண்டுபிடித்து சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி பெண் சிவரஞ்சனி. தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை தனது கணவர் சரவணகுமார் உதவியுடன் தேடிச்சென்று 1,520 நெல் ராகங்களை கண்டறிந்து தனது வயலில் பயிரிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, பழங்காலம் முதல் இந்தியாவில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்ததாகவும், தற்போது அவற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நெல் ரகங்களை காண முடிகிறது . தன் வாழ்நாளில் தன்னால் முடிந்த அளவு தொலைந்து போன நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என உறுதியுடன் அசாம் ஒரிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, சட்டீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது தேடலை விரிவுபடுத்தி இலுப்பைப்பூ சம்பா, கருங்குருவை, மடுமுழுங்கி ,நவரா, பால் குடவாழை, வெள்ள குடவாழை ,செம்புலி பிரியன் ,கடற்பாலி உள்ளிட்ட 1520 தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு 3ஏக்கர் வயலில் ஒவ்வொரு நெல் ரகங்களையும் 40 சதுர அடி என்ற அளவில் அவற்றை பயிரிட்டு தற்போது அவைகள் நன்றாக கதிர் விட்டு உள்ளது.
தங்கத்தம்பா, சொர்ணமுகி, சொர்ணமல்லி, வாடன் சம்பா, புழுதிக்கார், செங்கல்பட்டு, சிறுமணி, சொர்ணவாரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களையும், ஊட்டச்சத்துக்களையும் உடைய நெல் ரகங்களை பயிரிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1,520 பாராம்பரிய நெல் வகைகளை இவர் பயிர் செய்துள்ளார். இவர் சாகுபடி செய்துள்ள வயலில் தற்போது அறுவடை பணி நடந்து வருகிறது. பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுத்த விவசாயிகளுக்கு வழங்கி நமது பாரம்பரிய விவசாயத்தை காப்பதே எனது லட்சயம் என்று சிவரஞ்சனி கூறினார்.
The post வேதாரண்யம் அருகே சாகுபடி செய்த வயலில் பாரம்பரிய நெல் அறுவடை பணி மும்முரம் appeared first on Dinakaran.