*ஒரு டன் ரூ.2500 வரை விற்பனை
வேதாரண்யம் : வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு டன் உப்பு ரூ.2000 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் இரண்டாம் இடம் வகிக்கிறது.
இங்கு அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இத்தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறும். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது வேதாரண்யம் பகுதியில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெறுகிறது. உப்பு உற்பத்தியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்தமாதம் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் போதுமான உப்பு இருப்பு வைக்க இயலாத நிலையில் தற்போது உற்பத்தி செய்யப்படும் உப்பை உடனுக்குடன் விற்பனைக்காக லாரி மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.
ஒரு டன் உப்பு ரூ.2000 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் முழுவீச்சில் உப்பு உற்பத்தி நடந்தாலும் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி இலக்கான 6 லட்சம் டன் எட்டுவது கடினம் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
The post வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தீவிரம் appeared first on Dinakaran.