வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் வாரச்சந்தையில் ₹80 லட்சத்திற்கு வர்த்தகம்

2 months ago 21

*கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி

கீழ்பென்னாத்தூர் : வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் வாரச்சந்தையில் நேற்று ரூ.80 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. இதனால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த சந்தையில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், கண்டாச்சிபுரம், சோமாசிபாடி மற்றும் கொளத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

மேலும், திருக்கோவிலூர், வீரபாண்டி, வைப்பூர், ஆவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து, போட்டி போட்டு கொண்டு விற்பனைக்கு வந்திருந்த ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர். இதனால் வாரச்சந்தை களைகட்டியது.

நேற்று நடந்த சந்தையில் கறவை மாடு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலும், ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், கோழி ரூ.400 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலும் மற்றும் காளை மாடு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையில் விற்பனை ஆகி உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். அதன்படி, நேற்று நடந்த சந்தையில் சுமார் ரூ.80 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் நடந்தது.

இந்நிலையில், இந்த வாரச்சந்தையானது, திருவண்ணாமலை- விழுப்புரம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து காய்கறி, பழங்கள் ஆடு, மாடுகள் விற்கப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், விபத்து ஏற்படும் சூழ்நிலையும் நிலவுகிறது. எனவே, இப்பகுதியில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட இடங்களில் சந்தை நடந்தால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்தவித இடையூறு இருக்காது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

The post வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் வாரச்சந்தையில் ₹80 லட்சத்திற்கு வர்த்தகம் appeared first on Dinakaran.

Read Entire Article