வேடசந்தூர் அருகே, அய்யலூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை: களைகட்டியது தீபாவளி சேல்ஸ்

3 weeks ago 6

வேடசந்தூர்: தீபாவளியையொட்டி, வேடசந்தூர் அருகே, அய்யலூரில் இன்று நடந்த சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனையாயின. இதையொட்டி வியாபாரிகள், விவசாயிகள் சந்தையில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, அய்யலூரில் பிரசித்தி பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் வியாழக்கிழமை கூடும் இந்த சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனையாகும். திண்டுக்கல் மாவட்டம் மட்டுமில்லாமல் மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து ஆடு, கோழிகளை மொத்தமாக வாங்கிச் செல்வர். வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று ஆட்டுச் சந்தை களைகட்டியது. அதிகாலை 2 மணி முதல் ஆடு, கோழிகளை விற்க விவசாயிகளும், அவைகளை வாங்க வியாபாரிகளும் குவிந்தனர்.

இதனால், சந்தையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. சந்தைக்குள் இடம் இல்லாததால், சந்தைக்கு வெளியே சாலை வரை கூட்டம் அலைமோதியது. இந்த வாரம் ஆடு, கோழிகளுக்கு விலை அதிகரித்த போது, வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர். 10 கிலோ வெள்ளாடு ரூ.8,500, செம்மறி ஆடு ரூ.7,000, ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.450, சண்டை சேவல் ரூ.15,000 என விற்பனையானது. இன்று ஒரு நாள் மட்டும் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடு, கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து வியாபாரிகள் தெரிவித்தபோது, ‘வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த வாரம் வியாபாரம், கடந்த வாரத்தை காட்டிலும் இரண்டு மடங்கு நடைபெற்றது’ என்றனர்.

The post வேடசந்தூர் அருகே, அய்யலூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை: களைகட்டியது தீபாவளி சேல்ஸ் appeared first on Dinakaran.

Read Entire Article