வேடசந்தூரில் கழிவுநீர் கால்வாயில் இறைச்சி கழிவுகளை கொட்டிய 5 கடைகளுக்கு சீல் வைப்பு

2 weeks ago 4

*வியாபாரிகள் மறியலால் பேரூராட்சி அதிரடி

வேடசந்தூர் : வேடசந்தூரில் கழிவுநீர் கால்வாயில் இறைச்சி கழிவுகளை கொட்டிய 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.வேடசந்தூர் மார்க்கெட் ரோட்டில் கடந்த மாதம் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.

இந்த கால்வாயில் கோழி கறிக்கடை கழிவுகளை கொட்டுவதால் கழிவுநீர் அடைத்து கொண்டு கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், புழுக்கள் அதிகளவில் உள்ளதாகவும், கடைகளில் உட்கார முடியாமல் அவதிப்படுவதாகவும், பொருட்கள் வாங்க வருபவர்கள் துர்நாற்றத்தால் வாங்காமலேயே சென்று விடுவதாகவும் அப்பகுதி வியாபாரிகள் குற்றம்சாட்டி நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்ததும் வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கழிவுநீர் கால்வாய் சீர் செய்யப்படும் என தெரிவித்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த மறியலின் காரணமாக அரை மணிநேரம் மார்க்கெட் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவலறிந்தும் பேரூராட்சி செயல் அலுவலர் மரிய அந்தோணி யூஜின் மேரி உடனடியாக ஊழியர்களுடன் வந்து 5 இறைச்சி கழிவுகளை கழிவுநீர் கால்வாயில் கொட்டியதாக 5 கோழிக்கறி கடைகளுக்கு சீல் வைத்தார்.

இதுகுறித்து செயல் அலுவலர் கூறுகையில், ‘கோழி இறைச்சி கழிவுகளை அகற்றுவதற்காக பேரூராட்சி சார்பில் தனியாக ஒரு வாகனம் அமைத்து ஒரு நாளைக்கு மூன்று முறை சென்று கழிவுகளை வாங்கி செல்கின்றோம். அப்படி இருந்தும் கோழி கறி கடைக்காரர்கள் கழிவுநீர் கால்வாயில் கொட்டி விடுகிறார்கள். இனி பேரூராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post வேடசந்தூரில் கழிவுநீர் கால்வாயில் இறைச்சி கழிவுகளை கொட்டிய 5 கடைகளுக்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article