வேங்கைவயல் விவகாரம்: மலம் கலந்த நீரை யாரும் குடிக்கவில்லை - அரசு தரப்பு விளக்கம்

1 week ago 1

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருந்தநிலையில், அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

அதில் மூன்று நபர்கள் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலினத்தவர் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதா என பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அவேங்கை வயல், குற்றப்பத்திரிகை, கோர்ட்டுதேபோல் அரசு தரப்பில் அறிவியல் சாட்சியங்கள் உள்ளதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பவானி மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த கார்வேந்தன் உள்ளிட்டோர் ஆஜராகினர். அரசு தரப்பில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி முன்பு ஆஜராகினர். இரண்டு தரப்பினரும் இன்று விசாரணையின்போது கடுமையான வாதங்களை முன்வைத்தனர்.

அப்போது நடந்த விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பவானி மோகன் வாதிடுகையில், "இந்தியா முழுவதும் பட்டியலின மக்களுக்கு எதிரான சாதிய தீண்டாமைகள் இருந்து வருகிறது. அதற்கு உதாரணமாக தான் வேங்கைவயல் சம்பவம் உள்ளது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. அரசியல் சட்ட பிரிவின்படி அதை ஏற்கக் கூடாது" என்று கூறினார்.

அப்போது நீதிபதி அரசு தரப்பு வழக்கறிஞரிடம், "நீங்கள் ஏன் இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கியது பற்றி புகார்தாரருக்கு தெரிவிக்கவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், "இந்த வழக்கு தொடர்பாக தகவல் சொல்வதற்கு நாங்கள் மூன்று முறை அவர்களுக்கு சம்மன் அனுப்பினோம். ஆனால் அவர்கள் வரவில்லை. வர முடியாது என எழுத்துப்பூர்வமான கடிதத்தை எங்களுக்கு கொடுத்திருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் என்று யாரும் இல்லை. மனித கழிவு கலந்த குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகிக்கப்பட்ட தண்ணீரை யாரும் குடிக்கவில்லை. ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டதாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த குழந்தைகள் இந்த கழிவு கலக்கப்பட்ட குடிநீரை குடிக்கவில்லை என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம். சிபிசிஐடி இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தி உள்ளது" என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நாளை மறுநாள் ( பிப்., 3ம் தேதி) இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

Read Entire Article