வேங்கைவயல் வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

5 hours ago 2

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்திய பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் அறிவியல் ரீதியாக ஆதாரங்கள், தடயங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டதில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த வழக்கில் இருந்த வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவும் நீக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 2-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை மார்ச் மாதம் 11-ந் தேதி நடைபெறும் என்றும், அப்போது குற்றம்சாட்டப்பட்ட போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணைக்காக முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் நேற்று புதுக்கோட்டை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 கோர்ட்டில் ஆஜராகினர். மேலும் 3 பேரும் ஜாமீன் கோரியும், குற்றப்பத்திரிகை நகல் கோரியும் மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி (பொறுப்பு) பூர்ணிமா முன்னிலையில் மதியம் விசாரணைக்கு வந்தது.

அப்போது 3 போ் தரப்பில் ஜாமீன்தாரர்கள் தலா 2 பேர் வீதம் 6 பேர் ஆஜராகி தங்களது ஆவணங்களை கொடுத்தனர். இதையடுத்து ஜாமீன்தாரர்களின் ஆவணங்களை ஏற்று முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.

அதன்படி, வேங்கைவயல் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் நீதிமன்றம் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை நகலை வழங்கினர். இதனையடுத்து வழக்கு விசாரணையை வருகின்ற 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Read Entire Article