வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா தடுமாற்றம்

5 hours ago 2

பார்படாஸ்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பார்படாசில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 59 ரன்கள் அடித்தார். அபாரமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளும், ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் தடுமாற்றத்துடனே தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கிரெய்க் பிராத்வெயிட் 4 ரன்களிலும், ஜான் கம்பெல் 7 ரன்களிலும் ஸ்டார்க் பந்துவீச்சில் வீழ்ந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கீசி கார்டி 20 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோமல் வாரிக்கன் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் அடித்திருந்தது. பிரண்டன் கிங் 23 ரன்களுடனும், ரோஸ்டன் சேஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 190 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 44 ரன்களும், ஷாய் ஹோப் 48 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 10 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் தடுமாறியது. சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சாம் கான்ஸ்டாஸ் 5 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த கேமரூன் கிரீன் (15 ரன்கள்), ஜோஷ் இங்கிலிஸ் (12 ரன்கள்) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.

2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களுடன் தடுமாறி வருகிறது. டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும், வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் உள்ளனர். ஆஸ்திரேலியா இதுவரை 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

Read Entire Article