வெள்ளி விலை உயர்வால் தீபாவளி ஆர்டர்கள் ‘நோ’: உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கலக்கம்

2 months ago 17

சேலம்: தமிழகத்திலேயே சேலத்தில்தான் வெள்ளிப்பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், கோவை, மதுரை உள்பட பல பகுதிகளில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி நடக்கிறது. சேலத்தில் செவ்வாய்பேட்டை, குகை, தாதகாப்பட்டி, பள்ளப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, கந்தம்பட்டி, திருவாக்கவுண்டனூர், கொண்டலாம்பட்டி, சிவதாபுரம், பனங்காடு, அரியகவுண்டம்பட்டி உள்பட பல பகுதிகளில் வெள்ளிப்பட்டறைகள் உள்ளன. இந்த பகுதிகளில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு வெள்ளியில் கால்கொலுசு, அரைஞாண்கொடி, குங்குமசிமிழ், டம்ளர், கிண்ணம், காமாட்சி விளக்கு, குடம் உள்பட பல்வேறு விதமான பொருட்கள் தினமும் பல கிலோ மதிப்பில் உற்பத்தியாகிறது.

இந்த வெள்ளிப்பொருட்கள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கொல்கத்தா, டெல்லி, ஆக்ரா, உத்தரபிரதேசம், குஜராத் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக பெரும்பாலான பெண்கள் கால்கொலுசு, மெட்டி, மோதிரம், பிரேஸ்லெட், செயின் உள்ளிட்ட வெள்ளிப்பொருட்களை அணிவார்கள். தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து வெள்ளி வியாபாரிகள் வெள்ளிப்பொருட்கள் கேட்டு சேலத்தில் அதிகளவில் ஆர்டர் தருவார்கள். ஆனால், இந்த ஆண்டு எதிர்பார்த்த ஆர்டர்கள் வராததால் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

இது குறித்து சேலம் வெள்ளி கால்கொலுசு கைவினையாளர்கள் சங்க தலைவர் ஆனந்தராஜன் கூறுகையில், ‘வெள்ளிப்பொருட்களில் குறிப்பாக இளம்பெண்கள் அதிகளவில் விரும்பி அணியும் அனார்கலி, குஷ்பூ, லைட்வெயிட் கொலுசுக்கு அதிகளவில் கடந்தாண்டு ஆர்டர்கள் வந்தது. அடுத்தபடியாக மெட்டி, மோதிரம், வெள்ளி அரைஞாண்கொடி, குங்குமசிமிழ், தட்டு உள்ளிட்டவைகளுக்கு ஆர்டர்கள் வந்தது. இந்தாண்டு தீபாவளிக்கு இன்னும் 28 நாட்களே உள்ள நிலையில், வியாபாரிகள் வரவில்லை. வடமாநிலங்களில் பெய்து வரும் மழையாலும், வெள்ளி விலை உயர்வாலும் எதிர்பார்த்த ஆர்டர்கள் வரவில்லை. ஆர்டர்கள் வராததால் வருவாய் பாதித்துள்ளது. நேற்று மொத்த விலையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.92 ஆயிரம் என்றும், சில்லரையாக ஒரு கிராம் வெள்ளி ரூ.100 என்றும் விற்பனை செய்யப்பட்டது’ என்று தெரிவித்தார்.

The post வெள்ளி விலை உயர்வால் தீபாவளி ஆர்டர்கள் ‘நோ’: உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கலக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article