காஞ்சிபுரம் மாநகராட்சியின் 21-வது வார்டு பகுதியில் மஞ்சள்நீர் கால்வாய் கரையில் அருந்ததியர் நகர், ஆதிதிராவிடர் பகுதி அமைந்துள்ளது. இங்கு, கடந்த 1983-ம் ஆண்டு முதல் சுமார் 64 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ராஜாஜி மார்க்கெட் பகுதியில் வசித்து வந்த இந்த மக்களை, அப்போதைய அரசு இடமாற்றம் செய்ததால் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகின்றனர்.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் மேற்கண்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா மற்றும் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ரூ.6 ஆயிரம் மானியத்தில் தொகுப்பு வீடுகள் அமைத்து தரப்பட்டது. இந்த அருந்ததியர் நகர், மஞ்சள் நீர் கால்வாய் கரையோரம் அமைந்துள்ளதால் ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தின்போது கால்வாயில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அப்பகுதி வாசிகளின் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கும் நிலை உள்ளது.