
புதுடெல்லி,
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பை ஏற்று 5 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். இந்த பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவு, பரஸ்பர பலன், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. விமான நிலையத்தில் முய்சுவை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அவரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இது தொடர்பாக ஜெய்சங்கர் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்திய பயணத்தை இன்று துவக்கிய அதிபர் முகமது முய்சுவை சந்தித்தேன். இந்தியா மாலத்தீவு உறவை மேம்படுத்துவதற்கான அவரது உறுதி பாராட்டக்கூடியது. பிரதமர் மோடியுடன் அவர் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தையானது நமது நட்புறவுக்கு புது உத்வேகம் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் ஜெய்சங்கர் கூறினார்.