வேலூர், ஜன.6: கடந்து ஆண்டு வேலூர் மாவட்டத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்தி சென்ற 43 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளிலில் பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதை வெளி மாநிலங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி வேலூர் மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவுக்கு மினிவேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் ரெயில்களில் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக வேலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர்கள், பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான குழுவினர் மாவட்ட, மாநில எல்லையில் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபடுகிறார்கள். அதைத்தவிர பொதுமக்கள் அளிக்கும் தகவலின்பேரில் சம்பந்தப்பட்ட வீடு, கடை, குடோன்களில் போலீசார் சோதனை செய்கின்றனர்.
அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை உணவுப்பொருள் வழங்கல் அலுவலர் தலைமையிலான குழுவினர் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் 43 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மதிப்பு ₹2 லட்சத்து 43 ஆயிரமாகும். அதைத்தவிர வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட 92 சமையல் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்பட 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரேஷன்அரிசி கடத்தல் தொடர்பாக 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று உணவுப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வெளி மாநிலங்களுக்கு கடத்தி சென்ற 43 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 52 வழக்குகள் பதிவு கடந்த ஆண்டு வேலூர் மாவட்டத்திலிருந்து appeared first on Dinakaran.