வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் வழக்கு நெல்லை காங்கிரஸ் எம்பி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

2 hours ago 1

சென்னை: நடத்த முடிந்த 18வது நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸிடம் 1 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில், நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் ஆணையம் அனுமதித்த தொகையை விட கூடுதலாக தேர்தல் செலவு செய்துள்ளார். நேர்மையான முறையில் அவர் வெற்றி பெறவில்லை என்பதால் அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தொடர்ந்து கால அவகாசம் வழங்க முடியாது. அடுத்த விசாரணையின் போது பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராபர்ட் புரூஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோவன், தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதுவரை தங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்பதால் பதிலளிக்கவில்லை என்று தெரிவித்தார். நயினார் நாகேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர் என்று தெரிவித்தார். இதையடுத்து, ராபர்ட் புரூஸ் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 21ம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.

The post வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் வழக்கு நெல்லை காங்கிரஸ் எம்பி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article