‘வெறிநாய் என்னை கடித்துவிட்டது’ சிறுமி கலெக்டருக்கு எழுதிய கடிதம் வைரல்

1 month ago 5

நாகர்கோவில் : வெறி நாய் என்னை கடித்துவிட்டது என்று நாகர்கோவில் பகுதி சிறுமி ஒருவர் குமரி மாவட்ட கலெக்டருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாகர்கோவில் மாநகர பகுதியில் வெறிநாய் தொல்லை அதிகரித்துள்ளது. மாநகர பகுதியில் உள்ள இறைச்சிக்கடைகள், மீன் மார்க்கெட், திறந்த வெளி உணவகங்கள், மாலை நேர சிற்றுண்டி கடைகள் போன்ற பகுதிகளை சுற்றி தெருநாய்கள் காணப்படுகின்றன.

கலெக்டர் அலுவலக பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் தெருநாய்கள் எண்ணிக்கை குறையவில்லை. இவை குழந்தைகள் உள்ளிட்டோரை கடித்து தொந்தரவு செய்கிறது. அந்த வகையில் நாகர்கோவில் புத்தேரி, கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த சக்தி என்ற 9 வயது சிறுமியை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. காயமடைந்த சிறுமியை பெற்றோர் அழைத்து சென்று தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் சிறுமி குமரி மாவட்ட கலெக்டருக்கு தனது கைப்பட கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடிதத்தில், ‘அம்மா, நாகர்கோவில் தொகுதிக்கு உட்பட்ட புத்தேரி ஊராட்சியில் கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய்கள் அதிகம் காணப்படுகிறது. வெறிநாய்கள் அதிகம் உள்ளதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தினமும் வெறி நாய்கள் கடித்துக்கொண்டு இருக்கிறது. நேற்று நான் கணேஷ் நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு வெறிநாய் வந்து என்னை கடித்துவிட்டது. என்னை போன்று அந்த வழியாக செல்லும்போது மக்களையும் இது கடித்துள்ளது.

இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளதால் பொதுமக்கள் இடையே அச்சம் நிலவி வருகிறது. மேலும் புத்தேரி ஊராட்சியில் என்னை நாய் கடித்தது போன்று வேறு யாரையும் கடிக்காமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு புத்தேரி ஊராட்சியும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

The post ‘வெறிநாய் என்னை கடித்துவிட்டது’ சிறுமி கலெக்டருக்கு எழுதிய கடிதம் வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article