சென்னை : தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வில் முதல்முறையாக வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில், “”வெம்பக்கோட்டை எனும் விசித்திரக்கோட்டை”.. பண்டைய தமிழர்களை நோக்கிய பயணமான வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில், 24.9 செ.மீ நீளமும், 12.6 செ.மீ விட்டமும், 6.68 கிராம் எடை கொண்ட சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வில் முதல் முறையாகக் கிடைக்கப்பெற்ற பதக்கம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பு.
மேலும், இந்த அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆட்டக்காய் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 27.7மி.மீ உயரமும், 25.5 மி.மீ விட்டமும் கொண்ட இந்த ஆட்டக்காயின் வடிவம் ஒருபுறம் விலங்கின் தலைப்பகுதியும், மறுபுறம் பறவையின் தலைப்பகுதியும் கொண்டதாக இருப்பது வியப்பளிக்கிறத,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற மற்றொரு பதிவில், “பல ஆச்சரியங்களை தனக்குள் புதைத்து வைத்திருக்கும் வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் அரிய வகை கல்மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் முத்திரை, சங்கு வளையல் எனப் பல பழங்கால தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post “வெம்பக்கோட்டை எனும் விசித்திரக்கோட்டை”.. முதல் முறையாகக் கிடைக்கப்பெற்ற பதக்கம் இதுதான் : அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.