ஏழாயிரம்பண்ணை :வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.
இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்கமணி, சூது பவளமணி உட்பட 3,210 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற அகழாய்வின்போது முழு வடிவிலான சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை மற்றும் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், ‘‘நமது முன்னோர்கள் வெளிமாநிலங்களில் இருந்து சங்குகளை பெற்று வளையல்களை தயாரித்து வந்துள்ளனர்.
மேலும் கிடைக்கப்பட்ட குடுவையில் குடிநீர் அல்லது உணவுப்பொருட்கள் ஏதேனும் வைத்து பயன்படுத்தி வந்திருக்கலாம். சுடுமண் முத்திரையின் மூலம் வணிகம் செய்து வந்ததற்கான சான்று தெரிய வருகிறது. கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வளையல்களில் அலங்காரம் செய்துள்ளனர்’’ என தெரிவித்தார்.
The post வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு appeared first on Dinakaran.