மும்பை,
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் வெப்தொடர் ஒன்றை இயக்குகிறார். இதன் மூலம் அவர் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். திரைத்துறையை பின்னணியாக கொண்ட கதைக்களத்துடன் இயக்குநராக களமிறங்குகிறார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். இந்த தொடர் நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டியில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதனை ஷாருக்கான் தனது ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இது தொடர்பான நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நெட்பிளிக்ஸுடன் இணைந்து புதிய தொடரை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது ஆர்யன் கானின் தனித்துவமான கதை. இது முழுமையான பொழுதுபோக்கு தொடராக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் நடிகை மோனா சிங் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் திரையுலகைச் சுற்றி நடக்கும் கதை என்பதால், ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், கரண் ஜோஹர் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கானை பொறுத்தவரை அவர் நடிப்பில் அடுத்ததாக 'கிங்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் அவரது மகள் சுஹானா கான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நடிகராக அல்லாமல் இயக்குநராக அறிமுகமானதை கங்கனா ரனாவத் பாராட்டியுள்ளார்.
"குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது. திரையுலகக் குடும்பங்களில் இருந்து, மேக்கப் போடவும், உடல் எடையைக் குறைக்கவும், பொம்மையை வளர்க்கவும், தாங்கள் நடிகர்கள் என்று நினைக்கவும் ஆசைப்படுவதைத் தாண்டிச் செல்கிறார்கள். எங்களுக்கு கேமராக்களுக்குப் பின்னால் அதிகமானவர்கள் தேவை. ஆர்யன் இந்த பயணத்தை மேற்கொள்வது நல்லது" என்று கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத் 2006-ம் ஆண்டு கேங்ஸ்டர் திரைப்படம் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். தனது முதல் படம் அபார வெற்றி பெற்றது அதுமட்டுமின்றி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அடுத்தடுத்து வோ லம்ஹே, பேஷன், குயின் என ஹிட் கொடுத்தார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் இயக்கிய எமர்ஜென்சி படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி வெளியாகிறது.