வெடியங்காடு புதூர் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மழைநீர் கால்வாய்

2 weeks ago 3

 

ஆர்.கே.பேட்டை, நவ. 5: ஆர்.கே.பேட்டை அருகே வெடியங்காடு, புதூர் கிராமத்தில் இருபுறமும் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வெடியங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் மலைப்பகுதி உள்ளது. இங்கு, மழை காலங்களில் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் செல்வதற்காக 6 அடி கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த, கால்வாய் செல்லும் பகுதியில் இருபுறமும் விவசாயிகள், தங்களது விவசாய நிலத்துடன் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், தற்போது 2 அடி கால்வாயாக சுருங்கியுள்ளது. இதனால், மழைக்காலங்களில் மலையில் இருந்து வரும் மழைநீரானது கால்வாயில் செல்ல முடியாமல் வீணாக விளைநிலங்களில் புகுந்து விடுகிறது.

மேலும், 2 அடி கால்வாயிலும் செடி கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், மலையிலிருந்து வரும் மழைநீர் கால்வாயில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, மழைநீர் கால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றியும், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி மலையிலிருந்து வெளியேறும் மழைநீர் சீராக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வெடியங்காடு புதூர் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மழைநீர் கால்வாய் appeared first on Dinakaran.

Read Entire Article