வெங்காய எக்ஸ்பிரஸ் ரெயில் வருமா?

1 week ago 4

சமையல் அறையில் இல்லத்தரசிகளுக்கு மிக முக்கியமான பொருள் பெரிய வெங்காயமாகும். குழம்பு வைக்க வேண்டுமானாலும் சரி, கூட்டு பொரியல் உள்பட எந்த உணவு பண்டங்கள் சமைக்க வேண்டுமானாலும் சரி, வெங்காயம் இல்லாமல் எதுவும் முடியாது. ஏழை, எளியவர்கள் கஞ்சி குடித்தாலும் வெங்காயத்தை கடித்துக்கொண்டுதான் சாப்பிடுவார்கள். ஆக, ஏழைகள் என்றாலும், பணக்காரர்கள் என்றாலும், அவர்கள் உண்ணும் உணவில் வெங்காயம் இல்லாமல் எதுவும் இல்லை. அந்தவகையில், வெங்காயத்தின் விலை உயர்வு என்பது அன்றாட வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாட்டிலேயே மிகப்பெரிய வெங்காய மார்க்கெட் மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக்கில்தான் இருக்கிறது. இங்கு இருந்துதான் நாட்டின் பல பகுதிகளுக்கும் வெங்காயம் எடுத்து செல்லப்படுகிறது. கடந்த மாதம் தீபாவளி நேரத்தில் வெங்காயத்தின் தேவை மிக அதிகமாக இருந்தது. அப்போது, டெல்லியில் வெங்காயத்தின் விலை தினமும் ஏறிக்கொண்டே போனது. இந்த விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசாங்க நுகர்வோர் விவகார அமைச்சகம், நாசிக்கில் இருந்து வெங்காயத்தை ஏற்றிக்கொண்டு 'கண்டா எக்ஸ்பிரஸ்' அதாவது, 'வெங்காய எக்ஸ்பிரஸ்' என்ற சிறப்பு ரெயில் டெல்லிக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சிறப்பு சரக்கு ரெயில் 42 பெட்டிகளை இழுத்துக்கொண்டு வந்தது. ஒவ்வொரு ரெயில் பெட்டியிலும் தலா 53 லாரிகளில் ஏற்றிக்கொண்டு செல்லும் அளவுக்கான வெங்காயம் என மொத்தம் 1,600 டன் (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ) கொண்டுசெல்லப்பட்டது. லாரிகளில் பொருட்களை ஏற்றிச்செல்வதைவிட சரக்கு ரெயிலில் கொண்டு செல்வதற்கான கட்டணம் குறைவாகவே உள்ளது.

வரலாற்றிலேயே முதல் முறையாக வெங்காயம் போன்ற உணவு பொருட்கள் உற்பத்தியாகும் இடத்தில் இருந்து பெரிய நகரங்களுக்கு சிறப்பு ரெயில் மூலம் கொண்டுவரப்படுவது இதுதான் முதல்முறை என்று நுகர்வோர் விவகார அமைச்சக செயலாளர் நிதி காரே தெரிவித்துள்ளார். இதுபோல, வெங்காயத்தை ஏற்றிக்கொண்டு லக்னோ, வாரணாசி மற்றும் நாகாலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கும் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டுசெல்ல ஏற்பாடுகள் நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். சரக்கு ரெயில் மூலம் வெங்காயம் கொண்டுவந்ததால் டெல்லியில் கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்டது, தீபாவளி நேரத்தில் மிகவும் பலனுள்ளதாக அமைந்தது என்று இல்லத்தரசிகள் கூறினர். நிதி காரே ஒரு பெண் என்பதால், குடும்பங்களில் வெங்காயத்தின் விலை உயர்வு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்? என்பதை உணர்ந்த காரணத்தால்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று மகிழ்ச்சியுடன் பெண்கள் கருத்து தெரிவித்தனர்.

வெங்காயத்தின் விலை டெல்லியில் மட்டுமல்ல, அதிகம் விளையாத தமிழ்நாட்டிலும் இப்போது ஒரு கிலோ ரூ.100-ஐ தொட்டுவிட்டதால், தமிழ்நாட்டுக்கும் இதுபோல சிறப்பு ரெயில் மூலம் வெங்காயத்தை கொண்டுவர மத்திய அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும். ஏனெனில், தமிழ்நாட்டுக்கும் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்துதான் லாரிகள் மூலம் வெங்காயம் கொண்டுவரப்படுகிறது. இதுபோல, தமிழ்நாட்டில் பூண்டு விலையும் ரூ.400-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்துதான் அதிக அளவில் வெள்ளைப் பூண்டு தமிழ்நாட்டுக்கு லாரிகள் மூலம் கொண்டுவரப்படுகிறது. எனவே, பூண்டு விலையை கட்டுப்படுத்தவும், பூண்டு சிறப்பு சரக்கு ரெயில் விட மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக செயலாளர் பரிசீலிக்க வேண்டும்.

Read Entire Article