வீராணம் ராட்சத குழாய் பழுது: சாலையில் வழிந்தோடும் குடிநீர்

11 hours ago 4


சென்னை: சென்னைக்கு குடிநீர் செல்லும் வீராணம் குடிநீர் திட்ட ராட்சத குழாய் பழுதாகி ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பால்பண்ணை அருகில் சென்னைக்கு குடிநீர் செல்லும் வீராணம் குடிநீர் திட்ட ராட்சத குழாய் செல்கிறது. சுமார் 240 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் இந்த ராட்சத குடிநீர் குழாயில் பல இடங்களில் காற்று வெளியேற தானியங்கி வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த குழாயில் தினசரி வீராணம் ஏரியிலிருந்து 70 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிக அழுத்தத்துடன் தண்ணீர் சென்றதால் அதன் வால்வு பழுதாகி தானாக திறந்து கொண்டு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் பல அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்தபடி வீணாகி வருகிறது.

போதுமான பராமரிப்பு பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்யாததால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும், பொதுமக்களும் குற்றச்சாட்டினர். கோடை காலத்தில் வீராணம் ஏரியில் பாசனத்திற்கு தண்ணீர் தருவதைவிட சென்னை குடிநீருக்கு கொண்டு செல்ல அதிக அக்கறை காட்டும் அதிகாரிகள் ராட்சத குழாய் பகுதிகளை பராமரிப்பு செய்யாமல் விட்டது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் வெளியேறும் பகுதியை சரி செய்ய பணியாளர்கள் நீண்ட நேரம் முயன்றும் முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அவர்கள் தொடர்ந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post வீராணம் ராட்சத குழாய் பழுது: சாலையில் வழிந்தோடும் குடிநீர் appeared first on Dinakaran.

Read Entire Article