வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

4 weeks ago 7

காட்டுமன்னார்கோவில், டிச. 17: வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரிக்கு கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை வடிகால், பாப்பாக்குடி வடிகால், ஆண்டிப்பாளையம் வடிகால் மூலமாக நேற்று மதியம் நிலவரப்படி தண்ணீர் 800 கன அடிநீர் வரத்து இருந்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் 45.50 அடியாக இருந்தது. இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 74 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேலும் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக வினாடிக்கு 850 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் நாரை ஏரி வழியாக வரும் உபரி நீர் வடவாறு மதகு மூலம் திறந்து விடப்படுகிறது.இதனால் ஓடையில் வெள்ளப்பெருக்கு குறைந்து கிராமங்களில் சூழ்ந்த தண்ணீர் வடிந்து வருகிறது. இதனால் லால்பேட்டை, திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், சர்வராஜன்பேட்டை, எள்ளேரி, குமராட்சி உள்ளிட்ட இடங்களில் வீடுகளை சுற்றி தேங்கி இருந்த தண்ணீர் மெல்ல மெல்ல குறைந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. மேலும் தாழ்வான சில பகுதிகளில் நீர் வெளியேறாமல் உள்ளது. அதுபோல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் வெளியேற துவங்கினர். மேலும் படிப்படியாக தண்ணீர் குறையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது appeared first on Dinakaran.

Read Entire Article